தருமபுரம் ஆதீன மடத்திற்கு புதிய யானை தருமபுரம் ஞானாம்பிகை
Mayiladuthurai King 24x7 |2 Aug 2024 5:33 AM GMT
மயிலாடுதுறையின் உள்ள பிரசித்தி பெற்ற தருமபுரம் ஆதீன திருமடத்தில் ஏற்கனவே இருந்த யானை பல ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தது. அதன் பின்னர் புதிய யானைகளை வாங்குவதற்கு மத்திய அரசு விதித்திருந்த கட்டுப்பாடுகளின் காரணமாக இதுவரை இக்கோயிலில் யானை இல்லாமல் இருந்தது. இந்நிலையில் மத்திய அரசு யானைகளை பெயர் மாற்றம் செய்து கொள்வதற்கு அனுமதி வழங்கி கடந்த மார்ச் மாதம் அறிவித்தது. இந்நிலையில்,, திருச்சி சமயபுரத்தை சேர்ந்த 34 வயது பெண் யானையை (லக்கிமணி) தானமாக தருமபுரம் ஆதீனத்திற்கு தருவதற்கு அதன் உரிமையாளர் சங்கர் முன்வந்தார். இதற்காக, தருமபுரம் ஆதீன திருமடத்தில் ஏற்கனவே யானை கொட்டகை கட்டப்பட்டு வனத்துறையினரிடம் அனுமதி கோரப்பட்டது. தற்போது பெயர் மாற்ற அனுமதி வழங்கப்பட்டதை தொடர்ந்து, சமயபுரம் யானை, தருமபுரம் ஞானாம்பிகை என பெயர் மாற்றம் செய்யப்பட்டு இன்று தருமபுரத்துக்கு வரவழைக்கப்பட்டது. இந்த யானைக்கு, ஆதீன வளாகத்தில் உள்ள விநாயகர் கோவிலில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, அங்கிருந்து, பசு, குதிரை, ஒட்டகம் ஆகிய மங்கல சின்னங்களுடன் ஞானாம்பிகை சமேத ஞானபுரீஸ்வரர் கோயிலுக்கு அழைத்து வரப்பட்டு, அங்கு தருமபுரம் ஆதீனம் 27-வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையில் யானை ஞானாம்பிகைக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது. இதில், தருமபுரம் வேத சிவ ஆகம பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story