திருக்கடையூரில் அபிராமி அம்மன் ஆடிப்பூர திருத்தேரோட்டம்
Mayiladuthurai King 24x7 |6 Aug 2024 5:04 AM GMT
ஆடிப்பூர திருவிழாவை முன்னிட்டு உலக புகழ் பெற்ற திருக்கடையூர் அபிராமி உடனாகிய அமிர்தகடேஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர தேரோட்டம் இன்று நடைபெற்றது. தருமபுரம் ஆதீனம் கட்டளை தம்பிரான் சுவாமிகள் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்
. மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூரில் உள்ள உலக புகழ் பெற்ற அபிராமி உடனாகிய அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மட்டுமே ஆயுள் விருத்திக்காக திருமணங்கள் மற்றும் பூஜைகள் நடைபெறுவது சிறப்பம்சமாகும். இந்த சிறப்பு பெற்ற கோவிலில் ஆண்டுதோறும் 10 நாட்கள் ஆடிப்பூர திருவிழா நடைபெறுவது வழக்கம் அதன்படி இந்த ஆண்டிற்கான ஆடிப்பூர திருவிழா கடந்த 29 ஆம் தேதி அபிராமி அம்மன் சன்னதியில் ரிஷப கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து தினமும் சுவாமி அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா காட்சி மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்வான ஆடிப்பூர தேரோட்டம் இன்று வெகுவிமரிசையாக நடைபெற்றது. முன்னதாக அலங்கரிக்கப்பட்ட தேரில் மேளதாளங்கள் முழங்க சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீ அபிராமி அம்மன் வெள்ளி அலங்காரத்தில் விநாயகர், சண்டிகேஸ்வரருடன் தேரில் எழுந்தருளி மகாதீபாரதனை செய்யப்பட்டது. தொடர்ந்து பக்தர்கள் பக்தி பரவசத்துடன் வடம் பிடித்து இழுக்க தேரோட்டம் நடைபெற்றது. மேல வீதியில் இருந்து தேர் புறப்பட்டு வடக்கு வீதி, கீழவீதி, தெற்கு வீதி ஆகிய நான்கு வீதிகளின் வழியாக வலம் வந்து நிலையை அடைந்தது. வீடுகள் தோறும் பக்தர்கள் தீபாரதனை, அர்ச்சனை செய்து வழிபாடு செய்தனர். இந்த ஆடிப்பூரு தேர் திருவிழாவில் தருமபுரம் ஆதீனம் சுப்பிரமணிய சுவாமி கட்டளை தம்பிரான் சாமிகள் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
Next Story