இயற்பியல்துறை முன்னாள் மாணவர்கள் கல்லூரிக்கு கட்டிக் கொடுத்த வகுப்பறைகள்

மயிலாடுதுறை மாவட்டம் பொறையார் டி பி எம் எல் கல்லூரியில் பயின்ற இயற்பியல் துறை முன்னாள் மாணவர்கள் ஒன்றிணைந்து ரூ.37 லட்சம் செலவில் புதிய வகுப்பறை கட்டிக் கொடுத்ததன் திறப்பு விழா நடைபெற்றது
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா பொறையாரில் டி.இ.எல்.சி திருச்சபை நிர்வாகத்திற்கு உட்பட்ட டி.பி.எம்.எல் கல்லூரி 1972 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. ஏழை எளிய மாணவர்கள் பயின்று வரும் இக்கல்லூரி இயற்பியல் துறையில் 1974 ஆம் ஆண்டு முதல் 2000 ஆம் ஆண்டுவரை பயின்ற முன்னாள் மாணவர்கள் கல்லூரிக்கு சோலார் மின் வசதி குறுங்காடுகள் உள்ளிட்ட நலத்திட்டங்களை வழங்கியுள்ளனர். இம்மானவர்கள் பிஸி மீட் என்ற அமைப்பின் மூலமாக ஒன்றிணைந்து தாங்கள் படித்த இயற்பியல் துறைக்கு ரூபாய் 37 லட்சம் மதிப்பீட்டில் இளங்கலை மற்றும் முதுகலை பிரிவிற்கு ஐந்து வகுப்பறை கட்டிடங்களை முதல் தளத்தில் கட்டி மாணவர்கள் பயன்பெறும் வகையில் கல்லூரிக்கு அர்பணித்தனர். இயற்பியல் துறை தலைவர் கர்த்தரினால் புனித வதி மற்றும் முன்னாள் மாணவர்கள் ரமேஷ் குமார் அருள்மொழிச் செல்வன் ஒருங்கிணைப்பில் மாணவர்களால் கட்டிக் கொடுக்கப்பட்ட புதிய கட்டிட திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் டி.இ.எல்.சி பிஷப் கிறிஸ்டியன் சாம்ராஜ் கலந்துகொண்டு வகுப்பறை கட்டிடங்களை மாணவர்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தனர். இதில் முன்னாள் இந்நாள் மாணவர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். தங்களால் கட்டிக் கொடுக்கப்பட்ட வகுப்பறை கட்டிடத்தில் முன்னாள் மாணவர்கள் தங்கள் செல்போனில் செல்பி எடுத்தும் நீண்ட நாட்களுக்கு பின்பு சந்தித்துக் கொண்ட கல்லூரி தோழர்கள் கொஞ்சி பேசி தங்கள் அன்பை வெளிப்படுத்தி கல்லூரி நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
Next Story