மூன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு கற்றல் திறன் அடைவு ஆய்வு
Mayiladuthurai King 24x7 |12 Aug 2024 11:15 AM GMT
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மூன்றாம் வகுப்பு மாணவர்களின் கற்றல் திறனை பரிசோதிக்கும் வகையில் மாவட்ட கல்வி அடைவு ஆய்வு
. மயிலாடுதுறை மாவட்டத்தில் அரசு தொடக்கப் பள்ளி ஒன்றில் அண்மையில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, அங்கு மாணவர்கள் கேள்விகளுக்கு உரிய பதிலை கூறுவதில் தடுமாற்றம் அடைந்ததை கண்டறிந்தார். இதையடுத்து மாவட்டம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களின் கற்றல் திறனை ஆய்வு செய்ய பள்ளிக் கல்வி துறைக்கு உத்தரவிட்டார். இதன் தொடர்ச்சியாக மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 136 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மூன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று மாவட்ட கற்றல் அடைவு ஆய்வு நடத்தப்பட்டது. ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் நடத்தப்படும் இந்த ஆய்வில் தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதம் ஆகிய மூன்று பாட பிரிவுகளுக்கு தலா முப்பது மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்தப்பட்டது. மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான ஸ்ரீ குருஞானசம்பந்தர் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் நடத்தப்பட்ட தேர்வில் இப்பள்ளியில் பயிலும் 145 மாணவர்களில் ஒரு வகுப்பில் இருந்து 45 மாணவர்கள் பங்கேற்று தேர்வு எழுதினர். இந்த தேர்வினை பள்ளிக் கல்வி துறை சிறப்பு ஆசிரியர் கோகிலா மேற்பார்வையிட்டார். இந்த அடைவு ஆய்வு மயிலாடுதுறை மாவட்டத்தில் மட்டும் மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தலின் பேரில் பிரத்தியேகமாக நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Next Story