இறுதி மூச்சு இருந்தவரை பகுத்தறிவை பேசியே மறைந்தவர் தந்தை பெரியார்

மூட நம்பிக்கைகளுக்கு எதிராக பகுத்தறிவை பேசி 95 வயது வரை உயிரோடு இருந்தவர் தந்தை பெரியார் மட்டுமே:- மயிலாடுதுறையில் நடைபெற்ற திராவிடர் கழக பொதுக்கூட்டத்தில் துணை பொதுச் செயலாளர் மதிவதனி பேச்சு
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை சின்னக்கடைத்தெருவில், திராவிடர் கழகம் சார்பில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு தொடக்க விழா, மூடநம்பிக்கை ஒழிப்பு, பெண்ணுரிமை பாதுகாப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திராவிடர் கழகத்தின் மாநில துணை பொதுச் செயலாளர் மதிவதனி கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் பேசுகையில், மூட நம்பிக்கைகளுக்கு எதிராக அறிவியல் உண்மைகளை, பகுத்தறிவை பேசிய சாக்ரடீஸ், கலிலியோ, புரூட்டோ உள்ளிட்ட உலகத் தலைவர்கள் கொல்லப்பட்டனர். இந்த கொலைகள் இந்த நூற்றாண்டிலும் கௌரி லங்கேஷ் வரை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இருப்பினும் மூட நம்பிக்கைகளுக்கு எதிராக பகுத்தறிவை பேசி 95 வயது வரை உயிரோடு இருந்தவர் தந்தை பெரியார் மட்டுமே. ஏனெனில் மற்றவர்கள் மூட நம்பிக்கைகளுக்கு எதிராக மட்டுமே பேசினர். பெரியார் மட்டுமே மூட நம்பிக்கைகளுக்கு காரணம் ஆரியர்கள் என்பதை குறிப்பிட்டு பேசினார். எனவே, பெரியார் கொல்லப்பட்டால் அதற்கு காரணமான ஆரியர்களை பெரியாரின் தொண்டர்கள் விட்டுவைக்க மாட்டார்கள் என்ற பயத்தின் காரணமாகவே அவரை ஆரியர்கள் ஒன்றும் செய்யவில்லை என்று பேசினார். இக்கூட்டத்தில், திராவிடர் கழக மாவட்ட தலைவர் குணசேகரன், மாவட்ட செயலாளர் தளபதிராஜ் மற்றும் திமுக, மதிமுக உள்ளிட்ட பல்வேறு ஒருமித்த கருத்துடைய கட்சிகளின் நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story