சி என் ஜி கேஸ் தட்டுப்பாடு நீங்கும்வரை புதிய ஆட்டோக்களுக்கு அனுமதி வழங்க எதிர்ப்பு

மயிலாடுதுறையில் சிஎன்ஜி கேஸ் தட்டுப்பாட்டை முழுமையாக நிவர்த்தி செய்யும்வரை சிஎன்ஜி கேஸில் இயங்கும் புதிய ஆட்டோக்களுக்கு பர்மிட் வழங்குவதை நிறுத்திவைக்க மாவட்ட சி.என்.ஜி கேஸ் ஆட்டோ ஓட்டுனர் மற்றும் உரிமையாளர்கள் சங்கத்தினர் வலியுறுத்தல்
பெட்ரோல், டீசல் எரிபொருளால் சுற்றுச்சூழல் மாசுபடுவதைத் தடுக்க அதற்கு மாற்றாக இயற்கை எரிவாயுவை உபயோகிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, தனியார் ஆட்டோ நிறுவனங்கள் சிஎன்ஜி எனப்படும் இயற்கை எரிவாயுவால் இயங்கும் ஆட்டோக்களை விற்பனை செய்தது. மயிலாடுதுறை மாவட்டத்தில் தற்போது, 1300 ஆட்டோக்கள் சிஎன்ஜி கேஸில் இயங்கி வருகிறது. ஆட்டோக்களை விற்பனை செய்யும்போது, மயிலாடுதுறையில் அதானி குழுமத்தின் 8 இயற்கை எரிவாயு பங்க்குகள் நிறுவப்படும் எரிபொருள் தட்டுப்பாடு இருக்காது என்று ஆட்டோ நிறுவனம் தரப்பில் கூறப்பட்டது. ஆனால், லட்சுமிபுரம், சேத்திரபாலபுரம், சீர்காழி ஆகிய 3 இடங்களில் மட்டும் பங்க்குகள் அமைக்கப்பட்டன. இங்கும் கேஸ் விநியோகம் சரிவர வழங்கப்படாத நிலையில், ஆட்டோக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், நகரில் கூடுதல் சி.என்.ஜி கேஸ் பங்க் அமைக்க மயிலாடுதுறை மாவட்ட சி.என்.ஜி கேஸ் ஆட்டோ ஓட்டுனர் மற்றும் உரிமையாளர்கள் சங்கத்தினர் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், சேத்திரபாலபுரத்தில் உள்ள சிஎன்ஜி மையத்தில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை கேஸ் நிரப்புவதை நேர நீட்டிப்பு செய்ய வலியுறுத்தி தமிழர் தேசிய முன்னணி மாவட்ட தலைவர் பேராசிரியர் முரளிதரன், சமூக ஆர்வலர் அப்பர்சுந்தரம் ஆகியோர் முன்னிலையில் சி.என்.ஜி கேஸ் ஆட்டோ ஓட்டுனர்கள் 50-க்கு மேற்பட்டோர் பங்க் உரிமையாளரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதன் முடிவில், காலை 6.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை கேஸ் நிரப்புவது என தீர்மானிக்கப்பட்டது. இதனிடையே, மயிலாடுதுறையில் சிஎன்ஜி கேஸ் ஆட்டோக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், உடனடியாக கூடுதல் பங்க்குளை அமைக்க வேண்டும், சிஎன்ஜி கேஸ் தட்டுப்பாட்டை முழுமையாக நிவர்த்தி செய்யும்வரை சிஎன்ஜி கேஸில் இயங்கும் புதிய ஆட்டோக்களுக்கு பர்மிட் வழங்குவதை நிறுத்திவைக்க வேண்டும் என மாவட்ட சி.என்.ஜி கேஸ் ஆட்டோ ஓட்டுனர் மற்றும் உரிமையாளர்கள் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.
Next Story