தொல் திருமாவளவன் காணொளி காட்சி மூலம் மயிலாடுதுறை நீதிமன்றத்தில் ஆஜர்
Mayiladuthurai King 24x7 |27 Aug 2024 9:48 AM GMT
மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வி.சி.க. தலைவர் திருமாவளவன் இன்று ஆஜராவதற்கு காலதாமதம் ஆகியதால் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஜர்.
மதமாற்ற தடை சட்டத்திற்கு எதிராக 2003-ஆம் ஆண்டு விசிக சார்பில் மயிலாடுதுறையில் நடைபெற்ற பேரணியின்போது ஏற்பட்ட கலவரம் தொடர்பாக விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட 42 பேர் மீது கொலை முயற்சி மற்றும் பொது சொத்துகளை சேதப்படுத்தியது உட்பட எட்டுக்கும் மேற்பட்ட சட்ட பிரிவுகளின் கீழ்பதிவு செய்யப்பட்டு விசாரணை மயிலாடுதுறை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இவ்வழக்கில் இதுநாள் வரை விசாரணைக்கு ஆஜராகாத திருமாவளவனுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து ஜூலை 31-ஆம் தேதி மாவட்ட அமர்வு நீதிபதி விஜயகுமாரி உத்தரவு பிறப்பித்தார். இந்த பிடிவாரண்ட் உத்தரவை திரும்பப் பெற வலியுறுத்தி விசிக வழக்கறிஞர்கள் மனு தாக்கல் செய்திருந்த நிலையில், ஆகஸ்ட் 27 ஆம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையுடன் பிடிவாரண்ட் உத்தரவு திரும்ப பெறப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கில் 18 பேர் விசிக பொறுப்பாளர்கள் ஆஜரான நிலையில் நீதிமன்றத்திற்கு வர காலதாமதம் ஆனதால் விசிக தலைவர் திருமாவளவன் எம் பி. வீடியோ கான்பிரன்ஸ் மூலம் ஆஜராகி தன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை மறுத்தார். தொடர்ந்து விசாரணை செய்த மாவட்ட அமர்வு நீதிபதி விஜயகுமாரி இந்த வழக்கை வருகின்ற செப்டம்பர் மாதம் 11-ஆம் தேதி ஒத்திவைத்தார். வீடியோ கான்பிரன்ஸ் மூலம் ஆஜரான தொல் திருமாவளவன் நேரில் வந்து கையெழுத்து இட உள்ளார்.
Next Story