மயிலாடுதுறையில் மாவட்ட இளைஞர் நீதிக்குழுவும் திறப்பு
Mayiladuthurai King 24x7 |29 Aug 2024 8:54 AM GMT
மயிலாடுதுறை மாவட்ட இளைஞர் நீதிக்குழுமம் திறப்பு:- மாவட்ட அமர்வு நீதிபதி விஜயகுமாரி திறந்து வைத்தார். மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த 132 வழக்குகள் வியாழக்கிழமை தோறும் விசாரிக்கப்படும்
தமிழ்நாட்டின் 38-வது மாவட்டமாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருந்து பிரித்து மயிலாடுதுறை மாவட்டம் கடந்த 2020-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இதையடுத்து, மாயூரநாதர் கோயில் தெற்குவீதியில் தற்காலிகக் கட்டடத்தில் தொடங்கப்பட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பின்னர் மன்னம்பந்தலில் நிரந்தரக் கட்டடத்துக்கு மாற்றப்பட்டு செயல்பட்டு வருகிறது. தொடர்ந்து, மயிலாடுதுறையில் பல்வேறு நிர்வாகத்துறை அலுவலகங்கள் ஒவ்வொன்றாக திறக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், மயிலாடுதுறை மாவட்டத்துக்கான இளைஞர் நீதிக்குழுமம் மாயூரநாதர் கோயில் தெற்குவீதியில் உள்ள பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று திறக்கப்பட்டது. தலைமை குற்றவியல் நீதித்துறை நீதிபதி மாயகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற விழாவில், மாவட்ட அமர்வு நீதிபதி விஜயகுமாரி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று இளைஞர் நீதிக்குழும அலுவலகத்தை ரிப்பன் வெட்டி திறந்து, குத்துவிளக்கேற்றி தொடக்கி வைத்தார். இந்த விழாவில் குற்றவியல் நீதித்துறை நடுவர் கலைவாணி, முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி ராஜேஷ் கண்ணா, அரசு வழக்கறிஞர் சேயோன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதையடுத்து, ஒருங்கிணைந்த நாகப்பட்டினம் மாவட்டத்தில் நடைபெற்றுவந்த 18 வயதுக்கு உட்பட்டோருக்கான வழக்குகளில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த 132 வழக்குகள் பிரித்து வழங்கப்பட்டு, இனி மயிலாடுதுறையில் வழக்குகள் விசாரிக்கப்படும்.
Next Story