மயிலாடுதுறை நகரம் விரிவாக்கப்பட உள்ளதாக தகவல் அரசு அறிவிப்பு உண்டா
Mayiladuthurai King 24x7 |4 Sep 2024 2:58 PM GMT
மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றியகுழு கூட்டம் தலைவர் காமாட்சி மூர்த்தி தலைமையில் நடைபெற்றது. மயிலாடுதுறை நகராட்சியில் நகர விரிவாக்கம் செய்வதாக தகவல் வெளியாகி உள்ளது குறித்து அரசு அறிவிப்பு ஏதேனும் உள்ளதா- சித்தமல்லி கிராமத்திற்கு ரெகுலர் பேருந்து விட வேண்டும் என்பது போன்ற கேள்விகள் கேட்கப்பட்டன.
மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கூட்டரங்கில் ஒன்றியக் குழு சாதாரணக் கூட்டம் நடைபெற்றது. ஒன்றியக்குழுத் தலைவர் காமாட்சிமூர்த்தி தலைமை வகித்தார். ஒன்றிய ஆணையர் விஜயலட்சுமி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பேசியது: வடவீரபாண்டியன் (காங்கிரஸ்): சித்தமல்லி கிராமத்துக்கு ஒரே ஒரு பேருந்து சேவை மட்டும் உள்ள நிலையில், அந்த பேருந்தும் சரிவர இயக்கப்படுவதில்லை. மினி பேருந்து சேவையும் ஏற்கனவே நிறுத்தப்பட்டு விட்டது. இதனால் மாணவர்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள். எனவே சித்தமல்லிக்கு ரெகுலர் பேருந்து சேவை வழங்க வேண்டும். ஒன்றிய நிதியில் நடைபெறும் பள்ளி கட்டடப் பணிகள், சாலை பணிகள் குறித்த விவரங்களை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். காந்தி (திமுக): அதிமானபுருஷன் கிராமத்தில் அங்கன்வாடி கட்டடம் ஆறரை லட்சம் மதிப்பீட்டில் தொடங்கி மூன்று லட்சம் எக்ஸ்டென்ஷன் செய்யப்பட்டது. இந்த பணிகள் மிகவும் தாமதமாக நடைபெறுகிறது. அந்த அங்கன்வாடி அமைந்துள்ள 100 மீட்டர் மண் சாலையில் பேவர் பிளாக் கற்கள் பதிக்க வேண்டும். கீரமேடு சுடுகாட்டு சாலை மண் சாலையாக உள்ளதையும், மேலகிடாய்த்தலைமேடு, அதியமானபுருஷன் கிராமங்களில் கப்பிச்சாலையாக உள்ள சுடுகாட்டுச் சாலைகளையும் தார்ச்சாலையாக மாற்றித்தர வேண்டும். மொழையூர் பாலத்திலிருந்து கிடாய்த்தலைமேடு செல்லும் கப்பிச் சாலையை தார் சாலையாக அமைத்துத் தர வேண்டும். முருகமணி (திமுக): மயிலாடுதுறை நகராட்சியில் நகர விரிவாக்கம் செய்வதாக தகவல் வெளியாகி உள்ளது குறித்து அரசு அறிவிப்பு ஏதேனும் உள்ளதா? கலைஞரின் வீடு கட்டும் திட்டத்தில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதல் இடத்தில் வீடுகட்டுவதற்கு அதிகாரிகள் மறுக்கின்றனர். மோகன் (திமுக): காவிரி ஆற்றில் ஒருமாதமாக தண்ணீர் செல்லும் நிலையிலும் மொழையூர் வாய்க்காலில் இதுவரை முழுமையாக தண்ணீர் வந்து சேரவில்லை. பொதுப்பணித்துறை அப்பகுதியில் முறையாக தூர்வாரி தண்ணீர் சென்று சேர நடவடிக்கை எடுக்க வேண்டும். பாலமுருகன்(அதிமுக): சோழம்பேட்டையில் உள்ள தொடக்கப்பள்ளி சிதிலமடைந்து மழைக்காலங்களில் ஒழுகுகிறது. அதனை சீரமைக்க வேண்டும். காமராஜ் (திமுக): மணல்மேட்டில் இருந்து மயிலாடுதுறை வழியாக சென்னை செல்லும் பேருந்து மயிலாடுதுறை வரை இடையில் எங்கேயும் நிறுத்தப்படுவதில்லை. அதனை வில்லியநல்லூர் உள்ளிட்ட முக்கிய இடங்களில் நிறுத்திச்செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். ராஜேந்திரன் (திமுக): தருமபுரம்-கருங்குயில்நாதன்பேட்டை இடையில் பாலம் கட்டித்தர வேண்டும். சிவக்குமார் (திமுக): சித்தர்காடு-மாப்படுகை இடையே 900 மீட்டர் சாலையை முதலமைச்சர் சாலை மேம்பாட்டுத் திட்டத்தில் சீரமைத்துத் தர வேண்டும். மாப்படுகையில் பழுதடைந்துள்ள விஏஓ அலுவலகம் பழுதடைந்துள்ளதை எம்எல்ஏ நிதியில் புதிதாகக் கட்டித்தர வேண்டும். மும்தாஜ்(திமுக): அருண்மொழித்தேவன்-கோட்டூர் இடையே 800 மீட்டர் சாலை சேதமடைந்து மோசமான நிலையில் உள்ளதை சீரமைத்துத் தர வேண்டும். இவ்வாறு விவாதம் நடைபெற்றது. முடிவில், வட்டார வளர்ச்சி அலுவலர் திவாகர் நன்றி கூறினார்.
Next Story