திருவிடைக்கழி முருகன் கோவில் கும்பாபிஷேகம்
Mayiladuthurai King 24x7 |15 Sep 2024 12:19 PM GMT
அறுபடை வீடுகளுக்கு இணையான ஸ்தலமாக விளங்கும் திருவிடைக்கழி பாலசுப்ரமணிய சுவாமி ஆலய கும்பாபிஷேகம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்*
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருவிடைக்கழி கிராமத்தில் 2000 ஆண்டுகள் பழமையான சோழ நாட்டு திருச்செந்தூர் என போற்றப்படும் பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. முருகப்பெருமானின் அறுபடை வீடுகளுக்கு இணையான ஸ்தலமாக விளங்கி வரும் இங்கு இரணியாசுரனை வதம் செய்த முருக பெருமான் சிவ பூஜை செய்து பாவ தோஷம் நீங்கிய ஸ்தலமாகவும், திருப்புகழ் பாடிய அருணகிரிநாதருக்கு முருகப்பெருமான் காட்சி அளித்த ஸ்தலமாகவும் திகழ்ந்து வருகிறது. இத்தகைய சிறப்புமிக்க கோவிலின் திருப்பணிகள் கடந்த 2022ஆம் ஆண்டு துவங்கப்பட்டு நிறைவடைந்து கும்பாபிஷேகம் இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. கடந்த 10ஆம்தேதி கணபதி ஹோமத்துடன் விழா துவங்கி 12ஆம் தேதி முதல்கால யாகசாலை பூஜைகள் துவங்கப்பட்டன. இன்று காலை ஆறாம் கால யாகசாலை பூஜைகள் துவங்கி மஹா பூரனாகுதி மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து யாகசாலையில் இருந்து பூஜிக்கப்பட்ட புனித கடங்கள் மேளதாள வாத்தியங்கள் முழங்க புறப்பட்டு விமானகும்பம் சென்றடைந்தது. அங்கு சிவாச்சாரியார்கள் சிறப்பு பூஜைகள் செய்த பின்னர் சுப்ரமணியர் கோபுரம் ராஜகோபுரம் உள்ளிட்ட 13 கோபுர கலசங்களுக்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மூலவர் கும்பாபிஷேகம் முருகனுக்கு ஹரோஹரா என்ற பக்தி கோசத்துடன் மூலஸ்தானங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. தருமபுர ஆதீனம், மயிலாடுதுறை எம்பி சுதா, பூம்புகார் எம்எல்ஏ நிவேதா முருகன் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். அதேபோன்று மயிலாடுதுறை நகர் பசுபதி தெருவில் எழுந்தருளியுள்ள மகா களியம்மன் ஆலய கும்பாபிஷேகம் நடைபெற்றது மேல் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Next Story