கடன் கொடுத்த தனியார் வங்கி மேலாளர்கள் தொந்தரவால் பயனாளி தற்கொலை
Mayiladuthurai King 24x7 |4 Oct 2024 8:39 AM GMT
குத்தாலம் அருகே தனிநபர் கடன் பெற்ற தொழிலாளி வங்கி ஊழியர்கள் தகாத வார்த்தைகளால் திட்டியதால் மனமுடைந்து தற்கொலை:- சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சிபிஎம் கட்சியினர் மற்றும் உறவினர்கள் கைது
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா கடலங்குடி கீழத்தெருவை சேர்ந்தவர் நடேசன் மகன் முனுசாமி (45). கூலி தொழிலாளியான இவருக்கு சுதா என்ற மனைவியும், 2 மகள்களும், 1 மகனும் உள்ளனர். முனுசாமி தனது குடும்ப தேவைக்காக மயிலாடுதுறை ஐடிஎப்சி வங்கியில் ரூ. 1 லட்சத்து 20 ஆயிரம், ஸ்ரீராம் பைனான்ஸில் ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் தனிநபர் கடன் பெற்று மாதத் தவணை கட்டி வந்துள்ளார். சமீபத்தில் விபத்தில் முனுசாமி காயமடைந்ததால் வங்கி கடனுக்கான மாத தவணையில் செலுத்த முடியவில்லை. இதனை அடுத்து வங்கி ஊழியர்கள் முனுசாமியின் வீட்டிற்கு வந்து தகாத வார்த்தைகளால் திட்டியதுடன் கடன் தவணையை கட்டெறுக்க முடியவில்லை என்றால் செத்துப்போ இன்சூரன்ஸ் கிளைம் செய்து கொள்கிறோம் என கூறியுள்ளனர். இதனால் மனமுடைந்த முனுசாமி கடந்த மாதம் 26-ஆம் தேதி விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றார். இதனை அடுத்து அவரை உறவினர்கள் சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சேர்த்து பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் சேத்திரபாலபுரம் பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மயிலாடுதுறை-கும்பகோணம் இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த மயிலாடுதுறை ஆர்.டி.ஓ. விஷ்ணுபிரியா, டிஎஸ்பி திருப்பதி, குத்தாலம் தாசில்தார் சத்தியபாமா, இன்ஸ்பெக்டர் ஜோதிராமன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் நடத்தியபேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட 110 பேரை போலீசார் கைது செய்தனர் இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story