திருவாடுதுறை ஆதீனம் கலந்து கொண்ட காவிரி துலா உற்சவ விழா

காவிரி துலா உற்சவ மாதப்பிறப்பு தீர்த்தவாரியை முன்னிட்டு காவிரியின் தென்கரையில் திருவாவடுதுறை ஆதீனக் கோயில்களான மாயூரநாதர் கோயில் மற்றும் அய்யாரப்பர் கோயில்களில் இருந்து பஞ்சமூர்த்திகள் எழுந்தருளி தீர்த்தவாரி:
. கங்கை, யமுனை, சரஸ்வதி உள்ளிட்ட புண்ணிய நதிகள், கோடிக்கணக்கான பக்தர்கள் தங்கள் பாவங்களைப் போக்கிக்கொள்ள புனித நீராடியதால் ஏற்பட்ட பாவச்சுமை நீங்க சிவபெருமானை பிரார்த்தித்ததாகவும், அவர்களிடம், மயிலாடுதுறையில் ஐப்பசி மாதம் 30 நாள்களும் தங்கி துலாக்கட்ட காவிரியில் புனித நீராடி பாவச் சுமைகளை போக்கிக்கொள்ள இறைவன் அருளியதாகவும் ஐதீகம். காசிக்கு நிகராக போற்றப்படும் மயிலாடுதுறையில் ஐப்பசி மாதம் 30 நாட்களும் இந்த துலா உற்சவம் நடைபெறும். இந்த ஆண்டு ஐப்பசி மாதத்தில் 29 தேதி மட்டும் உள்ளதால், 30-வது நாளன்று கடைமுகத் தீர்த்தவாரி செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் புரட்டாசி மாதம் 31-ஆம் தேதியான இன்று துலா உற்சவ மாதப்பிறப்பு தீர்த்தவாரி நடைபெற்றது. கடைசியாக 2005-ஆம் ஆண்டு இதேபோன்று ஐப்பசி மாதத்தில் 29 தேதிகள் வந்த நிலையில், தற்போது 19 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வந்துள்ள இந்த மாதப்பிறப்பு தீர்த்தவாரியில் வழிபடுவது மிகுந்த சிறப்புக்குரியது என கூறப்படுகிறது. அந்தவகையில், துலா உற்சவம் மாத பிறப்பு தீர்த்தவாரியுடன் இன்று தொடங்கியது. இதனை முன்னிட்டு திருவாவடுதுறை ஆதீனத்துக்குச் சொந்தமான அபயாம்பிகை சமேத மாயூரநாதர் சுவாமி, அறம்வளர்த்த நாயகி சமேத ஐயாறப்பர் சுவாமி பஞ்சமூர்த்திகளுடன் காவிரியின் தென்கரையில் எழுந்தருளுனர். அங்கு திருவாவடுதுறை ஆதீனத் தம்பிரான் சுவாமிகள் முன்னிலையில் அஸ்திரதேவருக்கு தீர்த்தவாரி நடைபெற்றது. தொடர்ந்து, அஸ்திர தேவருடன் ஏராளமான பக்தர்கள் காவிரியில் புனித நீராடினர். துலா உற்சவத்தில் முக்கிய விழாக்களாக நவ.1-ஆம் தேதி காலை அமாவாசை தீர்த்தவாரி, நவ.6-ஆம் தேதி திருக்கொடியேற்றம், நவ.10-ம் தேதி மயிலம்மன் பூஜை, நவ.12-ஆம் தேதி இரவு திருக்கல்யாணம், நவ.14-ம் தேதி திருத்தேர் உற்சவம் ஆகிய முக்கிய உற்சவங்கள் நடைபெற்று, நவ.15-ம் தேதி பிரசித்தி பெற்ற கடைமுகத் தீர்த்தவாரி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story