மயிலாடுதுறை அருகே வாட்ச்மேனை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை
Mayiladuthurai King 24x7 |11 Dec 2024 10:36 PM GMT
மயிலாடுதுறை அருகே பள்ளிக் காவலரை (வாட்ச்மேன்) அடித்துக் கொலை செய்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை:- மயிலாடுதுறை நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் இன்று நீதிபதி விஜயகுமாரி தீர்ப்பு
மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன்கோவில் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட கீழஆத்துக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் பெரியநாயகம்(50) நத்தம் அந்தோணியார் நடுநிலைப்பள்ளியில் காவலராக பணியாற்றி வந்தார். இவரிடம், அதே கிராமத்தைச் சேர்ந்த கல்யாணசுந்தரம் மகன் கார்த்திக்(32) என்பவர் 2019-ஆம் ஆண்டு ஜனவரி 7-ஆம் தேதியன்று, வழக்கம்போல் குடிப்பதற்கு பணம் கேட்டுள்ளார். பெரியநாயகம் பணம் இல்லை என்று சொல்லியதால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த கார்த்திக் கட்டையால் பெரியநாயகம் தலையில் தாக்கியதில் படுகாயம் அடைந்த பெரியநாயகம் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் வைத்தீஸ்வரன்கோவில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து கார்த்திக்கை கைது செய்தனர். மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்த இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் ராமசேயோன் ஆஜராகினார். இந்நிலையில், இன்று விசாரணைக்கு வந்த இவ்வழக்கில் காவலர் பெரியநாயகத்தை கொலை செய்த கார்த்திக்-க்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.2,000 அபராதம் விதித்தும், அபராத தொகையை செலுத்தத் தவறினால் மேலும் 3 மாத சிறைதண்டனை விதித்து நீதிபதி விஜயகுமாரி உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து, கார்த்திக்கை போலீஸார் கைது செய்து சிறைக்கு கொண்டு சென்றனர்.
Next Story