கூட்டுறவுத் துறையில் பணி ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதியம் கேட்டு ஆர்ப்பாட்டம்

37 ஆண்டுகள் பணிபுரிந்து ஓய்வுபெற்ற மாற்றுத்திறனாளிக்கு ஓய்வூதியம் வழங்காமல் இழுத்தடிப்பு:- மயிலாடுதுறை கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை முன்பு மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு ஆர்ப்பாட்டம்
மயிலாடுதுறை நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையில் கண்ணன் என்ற மாற்றுத்திறனாளி 37 ஆண்டுகள் பணிபுரிந்து, 2022-ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். இவர் 2013 மற்றும் 2014-ஆம் ஆண்டுகளில் மருந்து பிரிவில் பணியாற்றியபோது மருந்து இருப்பு குறைவுக்கு மருந்தாளர் மகாலட்சுமி மற்றும் விற்பனையாளர் ஆரோக்கியராஜ் ஆகியோர் காரணம் என்பதை கண்டறிந்து புகார் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக புகார் தெரிவித்த கண்ணனையும் சேர்த்து தண்டவரித் தொகை ரூ.3 லட்சத்து 96 ஆயிரத்தை கட்ட ஆணையிடப்பட்ட நிலையில் ஓய்வுபெறும் போது தனக்கான தண்ட வரியில் மூன்றில் ஒரு பங்கை தனியாக கட்ட சம்மதித்து கண்ணன் கடிதம் எழுதி கொடுத்துள்ளார். இருப்பினும் அவருக்கு ஓய்வூதிய நிதி பலனை வழங்காமல் அதிகாரிகள் அலைக்கழிப்பதாக குற்றம் சாட்டி நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை முன்பு இன்று தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்கத்தினர் சங்கத் தலைவர் கணேசன் தலைமையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு, அதிகாரிகளை கண்டித்து மாற்றுத்திறனாளிகள் கோஷங்களை எழுப்பினர். அவர்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி, அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 25-ஆம் தேதிக்குள் ஓய்வூதிய நிலுவைத் தொகை வழங்கப்படும் என உத்தரவாதம் அளித்ததன் பேரில் மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
Next Story