சாலை விபத்தில் பலியான கால்பந்தாட்ட வீரர் குடும்பத்திற்கு நிதி உதவி கோரிக்கை
தரங்கம்பாடி அருகே அரசு பேருந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த கால்பந்தாட்ட மாணவி, மாணவன் உயிரிழந்த நிலையில் நிதிஉதவி கேட்டு உயிர்தப்பிய மகளை படிக்க வைக்க உதவி கேட்டு துணை முதலமைச்சருக்கு மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் வாயிலாக மனு அளித்து பெற்றோர்கள், கிராமத்தினர் கோரிக்கை
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா எடுத்துக்கட்டி கிராமத்தை சேர்ந்த அந்தோணி விக்டர்ராஜ் என்பவரின் மகள்கள் இரட்டை சகோதரிகளான பியூலா ஹான்சி(14), பியூலா நான்சி(14), மகன் அந்தோணி விக்ரந்த் ராஜ்(12) ஆகிய மூவரும் திருக்களாச்சேரி ஹமீதியா உயர்நிலைப்பள்ளியில் மகள்கள் 10ஆம் வகுப்பும் மகன் 7ஆம் வகுப்பும் படித்து வந்தனர். கால்பந்தாட்ட வீரர்களான இவர்கள் மூவரும் அடுத்த மாதம் மாநில அளவில் நடைபெறவுள்ள கால்பந்தாட்ட போட்டியில் பங்குபெறுவதற்காக 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள காட்டுச்சேரி விளையாட்டு மைதானத்திற்கு கால்பந்தாட்ட பயிற்சியில் ஈடுபட கடந்த 24ஆம்தேதி இருசக்கர வாகனத்தில் சென்றபோது அரசு பேருந்து எதிர்பாராத விதமாக மோதியதில் பியூலா ஹான்சிக்கு நெற்றியில் லேசான காயம் ஏற்பட்டு உயிர்தப்பிய நிலையில் பியூலா நான்சி உயிரிழந்தார். தொடர்ந்து இரண்டு கால்களிலும் எலும்பு முறிவு ஏற்பட்டு ஆபத்தான நிலையில் தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த மகன் அந்தோனி விக்ரந்த்ராஜ் சிகிச்சை பலனின்றி உயிரிழ்ந்தார். 3 பேரில் 2பேர் விபத்தில் உயிரிழந்தது கிராமமக்களை சோகத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில் மாணவர்களை பரிகொடுத்த பெற்றோர் மற்றும் கிராமத்தினர் 20க்கும் மேற்பட்டோர் இன்று மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் வாயிலாக துணை முதலமைச்சருக்கு நாம் மக்கள் இயக்க தலைவர் வழக்கறிஞர் சங்கமித்திரன் தலைமையில் மனு அளித்தனர். கிறிஸ்துமஸ் பெருவிழாக்கள் ஒத்திவைக்கப்பட்டு இந்த சாலை விபத்தில் மரணமடைந்த குழந்தைகளுக்காக துக்க நிகழ்ச்சியில் கிராமத்தினர் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர். விபத்தில் காயம் பட்டு உயிர்பிழைத்த மகள் ப்யூலா ஹான்ஸிக்கு சிறப்பு மருத்துவ சிகிச்சை கொடுத்து சிறப்பு விளையாட்டு பயிற்சி கொடுத்து விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற செய்திடவும், ஆண் மற்றும் பெண் குழந்தைகளை இழந்து நிற்கதியாக நிற்கும் தங்களின் குடும்பத்திற்கு அரசு உதவி செய்து பாதுகாக்க வேண்டும் என்று துணை முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வழங்கிய மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
Next Story



