அந்தோணியார் ஆலயத்திற்கு தீச்சட்டி மற்றும் அங்கபிரதட்சம் செய்த கிறித்துவர்கள்
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயில் ஒன்றியம் மேலையூரை அடுத்த கஞ்சாநகரத்தில் 250 ஆண்டுகள் பழமை வாய்ந்த அந்தோனியார் ஆலயம் அமைந்துள்ளது. இங்கு நோய் தீர வேண்டியும், திருமண வரம், குழந்தை வரம் வேண்டியும், மதுபழக்கத்தில் இருந்து விடுபட வேண்டியும், நல்ல காரியங்கள் வெற்றி பெற வேண்டியும் 52 ஆண்டுகளாக பக்தர்கள் வினோத வழிபாட்டில் ஈடுபட்டு வருகின்றனர். ஆண்டுதோறும் ஜனவரி 1ஆம் தேதி அந்தோணியார் ஆலயத்திற்கு எதிரே உள்ள ஊர் பொது குளத்தில் பக்தர்கள் நீராடி விட்டு 500 மீட்டர் தொலைவில் உள்ள அந்தோனியார் ஆலயத்திற்கு குளக்கரையில் இருந்து அங்கப் பிரதட்சணம் செய்தும் முட்டி போட்டு கையில் மெழுகுவர்த்தியை ஏந்தி தீபம் அணையாமல் கோயில் வரை முட்டி போட்டு வந்தும், தீச்சட்டி ஏந்தியும் சிறப்பு வழிபாடு செய்வது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் ஆங்கில புத்தாண்டு தினமான ஜனவரி 1 ஆம் தேதியான இன்று ஏராளமான பக்தர்கள் குளக்கரையில் நீராடி அங்கப் பிரதட்சணம் செய்தும் முட்டி போட்டு கையில் மெழுகுவர்த்தியை ஏந்தி தீபம் அணையாமல் ஆலயம் வரை முட்டி போட்டு வந்தும், தீச்சட்டி ஏந்தியும் நூதன முறையில் வழிபாட்டில் ஈடுபட்டனர். தொடர்ந்து அந்தோனியார் ஆலயத்தில் சிறப்பு திருப்பலி பூஜை செய்யப்பட்டது.
Next Story





