வைத்தீஸ்வரன்கோயில் பேரூராட்சியுடன் இணைப்பதை கண்டித்து ஆட்சியரிடம் மனு அளித்த கிராமமக்கள்

சந்தைவெளி கிராமத்தை வைத்திஸ்வரன்கோவில் பேரூராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திரண்ட கிராமத்தினர் குறைதீர் கூட்டத்தில் மனு. கருத்துகேட்பு நடத்தாமல் முடிவெடுப்பதாக குற்றசாட்டு
மயிலாடுதுறை புதிய மாவட்டமாக உருவாக்கப்பட்டதை அடுத்து நகராட்சி, பேரூராட்சிகளில் விரிவாக்கம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. கதிராமங்கலம் ஊராட்சியில் உள்ள 1 மற்றும் 2 வது வார்டு சந்தைவெளி கிராமத்தை வைத்தீஸ்வரன்கோவில் பேரூராட்சியுடன் இணைக்கப்போவதாக அரசு அறிவித்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த சந்தைவெளி கிராம மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர். விடுதலை சிறுத்தைகள் கட்சி முன்னாள் மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், முன்னாள் ஊராட்சி தலைவர் நடராஜன் ஆகியோர் தலைமையில் கிராமமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து அங்கு நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் சந்தைவெளி கிராமத்தை பேரூராட்சியில் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மனு அளித்தனர். மனுவில் கதிராமங்கலம் ஊராட்சி சந்தைவெளி கிராமத்தில் பலதலைமுறைகளாக வசித்துவருகிறோம். கதிராமங்கலம், மேலகொண்டத்தூர் கிராமங்களுடன் ஒட்டி உரவாடிக்கொண்டிருக்கும் எங்கள் கிராம மக்களை சந்தைவெளி 1,2வது வார்டு பகுதியை மட்டும் வைத்தீஸ்வரன்கோவில் பேரூராட்சியுடன் இணைக்கப்படுகிறது. இதனால் ஏழை எளிய மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகக்கூடிய சூழல் உருவாகும். ஏழை மக்கள் பலர் நூறுநாள் வேலை திட்டத்தை நம்பித்தான் குடும்பத்தை நடத்தி வருகின்றனர். சந்தை வெளிபகுதியை பேரூராட்சியுடன் இணைக்கப்போவதாக தகவல் அறிந்த கடந்த ஜுன் மாதம் மனுஅளித்தபோது அப்படி ஒரு திட்டம் இல்லை இருந்தால் மக்களிடம் கருத்துகேட்பு கூட்டம் நடத்திமுடிவெடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் எந்தவித கருத்துகேட்பு கூட்டமும் நடத்தாமல் கதிராமங்கலம் ஊராட்சி 1,2, வார்டுகளை வைத்தீஸ்வரன்கோவில் பேரூராட்சியில் இணைத்து இருக்கிறார்கள். அதனை ரத்து செய்து கதிராமங்கலம் ஊராட்சியில் தொடர்ந்து சந்தைவெளி கிராமம் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அதில் கேட்டுக்கொண்டுள்ளனர்.
Next Story