மயிலாடுதுறை டி பி டி ஆர் பள்ளி நிர்வாகத்தை கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

மயிலாடுதுறை தேசிய மேல்நிலைப்பள்ளி நிர்வாகத்தின் தீண்டாமை கொடுமையை கண்டுகொள்ளாத மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்
:- மயிலாடுறையில் உள்ள நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த தேசிய மேல்நிலைப்பள்ளியில் இதற்கு முன்பு இருந்த தலைமை ஆசிரியர் கடந்த ஆண்டு பணி ஓய்வு பெற்றார். அடுத்த தலைமை ஆசிரியர் பதவியை உதவி தலைமை ஆசிரியராகவும், மூத்த முதுகலை ஆசிரியராகவும் உள்ள கலைவாணன் என்பவர் பட்டியல் சாதி என்பதால் அவருக்கு வழங்காமல், பணி மூப்பின் அடிப்படையில் 8-வது இடத்தில் இருந்த ஆசிரியரை பொறுப்பு தலைமை ஆசிரியராக பள்ளி நிர்வாகம் பணி அமர்த்தியது. சாதியின் அடிப்படையில் தலைமை ஆசிரியர் பணியமர்த்தப்பட்டதாக குற்றஞ்சாட்டி தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் ஏற்கனவே கடந்த ஆண்டு பள்ளியின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்நிலையில் பள்ளி நிர்வாகத்தின் தீண்டாமை கொடுமையை கண்டுகொள்ளாத மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் விஜய் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், 75க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர். மேலும் சட்டத்தின்படியும், சமூக நீதியின்படியும் ஆசிரியர் கலைவாணனுக்கு தலைமை ஆசிரியர் பதவியை வழங்கிட ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
Next Story