மக்களுடன் முதல்வர் திட்டத்தில் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை விவசாயி குற்றச்சாட்டு

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் வட்டத்தில் மக்களுடன் முதல்வர் திட்டத்தில் அமைச்சர்கள் கோவி.செழியன், சி.வ.வீ.மெய்யநாதன் பங்கேற்று பொதுமக்களிடம் மனுக்களை பெற்று நலத்திட்ட உதவிகள் வழங்கினர்:-
மக்களுடன் முதல்வர் திட்டத்தில் மனு அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று விவசாயி குற்றச்சாட்டு:- மக்களுக்கு சென்றடைய வேண்டிய சேவைகளை மேம்படுத்தவும் பொது மக்களுக்கு அவற்றை விரைவாக கொண்டு சேர்க்கவும் "மக்களுடன் முதல்வர்" என்ற திட்டத்தை தமிழக அரசு இரண்டு கட்டமாக நடத்தி முடித்துள்ளது. தற்போது மூன்றாம் கட்டமாக நடத்தப்படும் மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் அமைச்சர்கள் பங்கேற்று பொதுமக்களிடம் நேரடியாக புகார் மனுக்களை பெற்று குறைகளை நிவர்த்தி செய்து வருகின்றனர். அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவில் வட்டத்தில் உள்ள பூந்தாழை கிராமத்தில் மூன்றாவது கட்ட மக்களுடன் முதல்வர் முகாம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஏ.பி மகாபாரதி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சி.வ.வீ. மெய்யநாதன் பங்கேற்றனர். பொதுமக்களிடம் நேரிடையாக குறைகளை கேட்டு அறிந்து மனுக்களை பெற்று நடவடிக்கை எடுக்க அமைச்சர்கள் உத்தரவிட்டனர். தொடர்ந்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் மனு அளிக்க வந்த கருவேலி கிராமத்தைச் சேர்ந்த ராமு என்ற விவசாயி கன்னி வாய்க்கால்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும், மகளிர் உரிமை தொகை கிடைக்கவில்லை என்றும் கடந்த முறை ஆக்கூரில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்டத்தில் மனு அளித்து இதுவரை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், கன்னி வாய்க்கால் ஆக்கிரமிப்பு அகற்றப்படாததால் பாதிக்கப்படுவதாகவும் அளித்த மனுவுக்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமலும் உரிய பதில் வழங்கவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார். தற்போது அமைச்சர்கள் பங்கேற்ற மக்களுடன் முதல்வர் முகாமில் மீண்டும் மனு அளித்திருப்பதாகவும் தனக்கு உரிய பதில் கிடைக்கவில்லை என்று தெரிவித்துள்ளார். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தொடர்ந்து அமைச்சர்கள் ஆக்கூர், பிள்ளை பெருமாநல்லூர் திருக்கடையூர், உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் மக்களுடன் முதல்வர் முகாமில் பங்கேற்று வருகின்றனர்.
Next Story