பெண்கள் மேடை ஏற பெரியார் காரணம் என அமைச்சர் பேச்சு
மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அருகே வக்காராமாரி பகுதியிலுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆண்டு விழா இன்று நடைபெற்றது. தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் மகாபாரதி மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜ்குமார் , நிவேதா முருகன் , பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற வேளாண்மைதுறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டுகளை தெரிவித்தார். பின்னர் அவர் மேடையில் பேசும்போது :- முன்னாள் முதல்வர் கலைஞர் பெண்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்த இட ஒதுக்கீடு காரணமாக தற்போது பொறுப்புகளில் இருக்கக்கூடிய மனைவிகளின் பெயர்களுடன் பின்னால் கணவன்மார்களின் பெயர் சேர்த்து அழைக்கப்படுவதாகவும் , இதன் காரணமாக மனைவியின் பெயர்களை கணவன்மார்கள் முன் சேர்த்து விடுவதாகும் கூறினார். தற்போதைய காலகட்டத்தில் நிலைமை மாறி இருப்பதாகவும் கருத்து தெரிவித்தார். ஒரு காலத்தில் பெண்கள் மேடைக்கு முன்னால் அமர முடியாத சூழலில் இருந்ததாகவும் , தற்போது பெண்கள் மேடையின் முன்பு அமர்ந்திருக்க ஆண்கள் ஒருபுறம் நின்று நிகழ்ச்சியை பார்ப்பதாகவும் கூறினார். இதுவே பெரியாரின் கனவு எனவும் தெரிவித்தார். பெரியாரைப் பற்றி சிலர் சாக்கடை போன்று பேசுவதாகவும் சாடினார். மேலும் கனமழையாள் சமீபத்தில் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்ட நிலையில் விவசாயிகளுக்கு உரிய நிவாரணமாக 10 கோடியே 82 லட்சம் தற்போது ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதாக கூறினார். விவசாயிகளுக்கு அனைத்தையும் நிறைவேற்றி தருபவர் தமிழக முதல்வர் ஸ்டாலின் எனவும் , மாணவர்கள் கல்வி கற்க ஒன்றிய அரசு நிதி ஒதுக்காததால் தமிழக அரசு பள்ளிக்கல்வித்துறைக்கு கொள்கை மாறாமல் நிதி வழங்கி வருவதாகவும் தெரிவித்தார்.
Next Story



