மயிலாடுதுறை அருகே காட்டுப்பன்றி தாக்கி விவசாயி படுகாயம்
மயிலாடுதுறை தாலுகா ஆனந்ததாண்டவபுரத்தை அடுத்த ஆற்காடு கீழத்தெருவைச் சேர்ந்தவர் கண்ணுசாமி(60). விவசாய கூலித்தொழிலாளியான இவர் இன்று மதியம் விவசாய பணிகளை முடித்து விட்டு வீட்டுக்கு திரும்பியுள்ளார். அப்போது, அங்கிருந்த வைக்கோல்போரில் மறைந்திருந்த காட்டுப்பன்றி ஒன்று கண்ணுசாமியை பலமாக தாக்கியுள்ளது. இதில், கண்ணுசாமிக்கு முகம், கை உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும், 4 பற்கள் கொட்டிய நிலையில், மேலும் சில பற்களில் அடிபட்டுள்ளது. கண்ணுசாமியின் அலறல் சத்தம் கேட்ட கிராமமக்கள் விரைந்து வந்து அவரை மீட்டு மயிலாடுதுறை அரசினர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கண்ணுசாமியை மயிலாடுதுறை முன்னாள் எம்.எல்.ஏ வீ.ராதாகிருஷ்ணன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், மயிலாடுதுறை தாலுகாவில் ஆனந்ததாண்டவபுரம், கீழமருதாந்தநல்லூர், மேலாநல்லூர் உள்ளிட்ட கிராமங்களில் காட்டுப்பன்றிகள் அட்டகாசம் கடந்த ஒரு வருடமாக அதிகரித்து காணப்படுகிறது. இதுகுறித்து, விவசாயிகள் மாவட்ட ஆட்சியரின் குறைதீர்க் கூட்டத்தில் கோரிக்கை வைத்தும் இப்பிரச்னை தீர்க்கப்படவில்லை. உடனடியாக நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த பாதிப்பு ஏற்பட்டிருக்காது. இது அரசின் அலட்சியத்தையே காட்டுகிறது. உடனடியாக மாவட்ட நிர்வாகம் காட்டுப்பன்றிகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மயிலாடுதுறை அரசினர் மருத்துவமனையில் மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் உள்ளது. நோயாளிக்கு தையல் போடுவதற்கு செல்போன் டார்ச்சை பயன்படுத்தும் அவல நிலை நிலவுகிறது. முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் தனியார் மருத்துவமனைக்கு நிகரான கட்டமைப்புகளுடன் விளங்கிய இந்த மருத்துவமனை தற்போது சீர்கேடு அடைந்துள்ளது. கடந்த ஆட்சியில் நான் எம்எல்ஏவாக இருந்தபோது, 45 மருத்துவர்கள் இருந்த நிலையில் தற்போது 23 மருத்துவர்கள் மட்டுமே உள்ளனர். இங்கு போதிய அளவில் மருத்துவர்களை நியமிக்க வேண்டும் என்றார்.
Next Story




