உயிருடன் இருக்கும் மாற்றுத் திறனாளிக்கு இறந்ததாக கூறி உதவித்தொகை மறுப்பு

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாற்று திறனாளிகள் காத்திருப்பு போராட்டம் :- மாற்றுத்திறனாளி யான மாவட்ட ஆட்சியர் தங்களது கோரிக்கைகளுக்கு செவிசாய்க்கவில்லை என மாநில செயலாளர் குற்றச்சாட்டு
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் இன்று காலை 11 மணி அளவில் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கி நடத்தி வருகின்றனர். உயிரோடு இருக்கும் மாற்றுத் திறனாளிகளை இறந்ததாக கூறி நிறுத்தி வைக்கப்பட்ட உதவித் தொகையை உடனடியாக விடுவிக்க கோரி நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர். சங்கத்தின் மாவட்டத் தலைவர் கணேசன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநிலச் செயலாளர் ஜீவா சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார். தொடர்ந்து வீடு , மனைப்பட்டா கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு உடனடியாக அரசு வழங்கிட நடவடிக்கை எடுக்க கோரியும் , கடும் மாற்றுத்திறனாளிகள் பெற்று வந்த உதவித்தொகை 6 மாத காலமாக வழங்கப்படாமல் நிறுத்தம் செய்யப்பட்டுள்ள நிலையில் உடனடியாக நிறுத்திய காலத்தில் இருந்து உதவித்தொகையை வழங்கிட வேண்டும் , AAY கார்டு கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு உடனடியாக வழங்க வேண்டும், வங்கி கடன் கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கும் கடன் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் , நகராட்சி மற்றும் பேரூராட்சிக்கு உட்பட்ட கடைகளில் அரசாணையின்படி 5 சதவீத இட ஒதுக்கீட்டின் மூலமாக மாற்றுத்திறனாளிகளுக்கு கடைகள் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாநில செயலாளர் ஜீவா தங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் , மாற்றுத்திறனாளியாக இருக்கக்கூடிய மாவட்ட ஆட்சியர் மகாபாரதி எங்களது கோரிக்கைகளுக்கு செவிசாய்க்கவில்லை எனவும் குற்றம் சாட்டினார். மேலும் தங்களை அழைத்து பேசி கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை ஆட்சியர் அலுவலகத்தின் வாயிலிலேயே அமர்ந்திருப்போம் எனவும் கூறினார்.
Next Story