மயிலாடுதுறை எம்பியை எதிர்த்து பாமகவினர் போஸ்டர் யுத்தம்
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே தாராசுரத்தில் வன்னியர் சங்கம் சார்பில் சமூக நல்லிணக்க மாநாடு அண்மையில் நடைபெற்றது. அப்போது பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியூரிலிருந்து வந்த வேட்பாளரை மூன்று லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்துள்ளீர்களே என கேள்வி எழுப்பினார். அதற்கு எதிர்வினை ஆற்றி நேற்று முன்தினம் அறிக்கை வெளியிட்ட மயிலாடுதுறை எம்பி சுதா, சென்னையில் இருந்து வந்த சௌமியா அன்புமணி தர்மபுரியில் போட்டியிடும் போது, நான் மயிலாடுதுறையில் போட்டியிட கூடாதா? உங்கள் வீட்டு பெண்களுக்கு ஒரு நீதி! மற்ற வீட்டு பெண்களுக்கு ஒரு நீதியா? இதுதான் கற்றுக்கொண்ட, கற்றுக்கொடுக்கும் சமூகநீதியா? என கேள்வி எழுப்பியிருந்தார். இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் எம்பி சுதாவை கண்டித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதில் வன்னியர் சங்க மாநாட்டையும், பாமக தலைவர்களையும் கொச்சைப்படுத்திய மயிலாடுதுறை பாராளுமன்ற வேட்பாளர் கும்மிடிப்பூண்டி ஆர்.சுதாவை கண்டிக்கிறோம் என குறிப்பிட்டுள்ளனர்.
Next Story



