நான்கு வழிச்சாலையால் பாதிக்கப்பட்டும் கிராம மக்கள் ஆட்சியரிடம் புகார் மனு
விழுப்புரம் முதல் நாகப்பட்டினம் வரையில் தேசிய நெடுஞ்சாலைத்துறை மூலம் நான்குவழிச்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் முதல் பொறையார் வரையில் சாலை அமைப்பதற்காக இடம் கையப்படுத்தப்பட்டு பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. நான்குவழிச்சாலை அமைக்கும் பல கிராமங்களில் ஒரு புறத்தில் இருந்து மற்றொரு புறத்திற்கு தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்வதற்கான சர்வீஸ் சாலை அமைக்கப்படாமலும், ஒருசில இடங்களில் மக்கள் பயன்பாடு அளிக்கும் வகையில் மேம்பாலம், சுரங்கப்பாதை அமைக்காமலும் சாலை பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் பொதுமக்கள் பலகிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டிய நிலை உள்ளது. தரங்கம்பாடி தாலுகா திருமெய்ஞானம் கிராமத்தில் வசிக்கக்கூடிய பொதுமக்கள் பிள்ளைபெருமாள்நல்லூர் வழியாக தங்களது அத்தியாவசிய தேவைகளுக்கு திருக்கடையூர் கடைவீதிகளுக்கு வந்துசெல்ல வேண்டும். மேலும் பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களும் திருக்கடையூர் மெயின்ரோட்டிற்கு வந்து பேருந்ததில் செல்லவேண்டிய சூழலில் அப்பகுதியில் மேம்பாலம் அமைக்காமல் நான்குவழிச்சாலை அமைக்கும் பணிகள் நடப்பதால் பிள்ளைபெருமாள்நல்லூர், மாணிக்கப்பங்கு, காலமநல்லுர் மற்றும் திருக்கடையூர் ஊராட்சி மக்கள் ஒன்றிணைந்து கடந்த நபம்வர் மாதம் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்து எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் மீண்டும் போராட்டம் அறிவித்தவுடன் அமைதிபேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் மேம்பாலம் அமைப்பதற்காக எந்தவித அதிகாரப்பூர்வமான உத்தரவாரத்தை அதிகாரிகள் அளிக்காததை அடுத்து இன்று பிள்ளைபெருமாள்நல்லூர், திருமெய்ஞானம் உள்ளிட்ட சுற்றுவட்ட கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் மயிலாடுதுறை மாவட்ட அட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்திற்கு வந்து ஆட்சியர் ஸ்ரீகாந்திடம் கோரிக்கைகளை வலியுறுத்தி மேம்பாலம் அமைத்துகொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மனுஅளித்தனர். இதேபோல் சீர்காழி தாலுகா கருக்குடி கிராமத்தில் வசிக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தை சேர்ந்தவர்கள் தங்கள் விவசாய விளைநிலங்களுக்கு செல்வதற்கான பாதை நான்குவழிச்சாலையால் முற்றிலுமாக மூடப்பட்டதால் சுமார் 8 கி.மீ. தூரம் சுற்றிக்கொண்டு செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் தங்களுக்கு சர்வீஸ் சாலையோ அல்லது விளைநிலங்களுக்கு டிராக்டர், அறுவடை இயந்திரம் உள்ளிட்ட கனரக வாகனங்கள் சென்றுவரும் வகையில் சுரங்கப்பாதை அமைத்துகொடுக்க வேண்டுமென்று கருக்குடி கிராமத்தை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் ஆட்சியர் ஶ்ரீகாந்திடம் அளித்த மனுவில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story



