கோயில் நுழைவாயிலில் முதல்வர் பேனர் பாஜக ஆன்லைன் புகார்
மயிலாடுதுறை நகராட்சிக்கு உட்பட்ட கண்ணாரத்தெருவில் உள்ள காமாட்சி அம்மன் கோயிலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடைபெற்ற நிலையில் 48 நாள் மண்டல அபிஷேகம் பக்தர்களால் சிறப்பாக செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், கோயில் நுழைவாயில் அருகே தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு வாழ்த்து பேனர்கள் இடையூறாக வைக்கப்பட்டுள்ளதாக பாஜகவினர் குற்றம் சாட்டியுள்ளனர். போக்குவரத்து நெரிசல் மிக்க அப்பகுதியில் வைக்கப்பட்டுள்ள பேனரை அகற்ற வேண்டும் எனவும், கடவுளை அவமதிக்கும் விதமாக முதல்வர் கால்மேல் கால்போட்டு அமர்ந்து இருப்பது போன்ற புகைப்படம் கோயிலின் முன்பு வைக்கப்பட்டிருப்பது பக்தர்களை புண்படுத்தும் விதமாக இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் உடனடியாக பேனரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாஜக மாவட்ட துணை தலைவர் மோடி.கண்ணன் தலைமையில் அக்கட்சியினர் ஆன்லைன் மூலம் மனு அளித்துள்ளனர். மாவட்ட காவல்துறை மற்றும் மயிலாடுதுறை காவல்துறையினருக்கு ஆன்லைன் மூலம் புகைப்படம் அடங்கிய மனுவினை கொடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Next Story





