தரங்கம்பாடி மாரியம்மன் ஆலயத்தில் பூச்சொரிதல் விழா

தரங்கம்பாடி அருகே புகழ் பெற்ற ஒழுகைமங்கலம் மாரியம்மன் ஆலயத்தில் பங்குனி திருவிழா பூச்சொரிதல் உடன் துவங்கியது, நூற்றுக்கணக்கான பெண்கள் பூத்தட்டு ஏந்தி வந்து வழிபாடு,
. மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே ஒழுகைமங்கலம் கிராமத்தில் புகழ்பெற்ற ஸ்ரீ சீதளா பரமேஸ்வரி என்னும் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. சோழ நாட்டின் சக்தி பீடங்களில் ஒன்றாக திகழும் இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி திருவிழா நடைபெறுவது வழக்கம். இதற்காக அடுத்த வாரம் ஞாயிற்றுக்கிழமை கொடியேற்று விழா நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு இன்று பூச்சொரிதல் விழா நடைபெற்றது. முன்னதாக அம்மன் சிறப்பு அலங்காரத்தில் மங்கள வாத்தியங்கள் முழங்க வீதி உலாவாக பக்தர்களுக்கு காட்சியளித்தார். தொடர்ந்து நூற்றுக்கணக்கான பெண்கள் மற்றும் பக்தர்கள் வேண்டுதல்களை நிறைவேற்றும் வகையில் பலவிதமான வண்ண மலர்களை ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். அதனைத் தொடர்ந்து அம்மனுக்கு மஞ்சள்பொடி, பால், பன்னீர், இளநீர், தேன், சந்தனம், திரவிய பொடி உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பூச்சொரிதல் நடைபெற்றது. அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாரதனை செய்யப்பட்டது. ஒரு மாத காலம் நடைபெறும் இந்த விழாவில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் தேர் திருவிழா, உதிரவாய்த்துடைப்பு,மஞ்சள் நீர் உற்சவம் உள்ளிட்டவை நடைபெறும் அப்போது பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில் பல்வேறு காவடிகள் மற்றும் புகழ் பெற்ற பாடை காவடி எடுத்து வந்து வேண்டுதல் நிறைவேற்றுவர்.இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
Next Story