இடிந்து நான்கு ஆண்டுகளாகியும் கட்டப்படாத பாலம்-போராட்டம்

மயிலாடுதுறையில் 2 வார்டுகளின் குறுக்கே காவிரி ஆற்றில் கட்டப்பட்ட நடைப்பாலம் இடிந்து விழுந்து 4 ஆண்டுகளாகியும் கட்டித்தராத நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து நீரில்லாத ஆற்றில் இறங்கி பொதுமக்கள் ஆரப்பாட்டம்
மயிலாடுதுறை நகராட்சி 1-வது வார்டு மற்றும் 9-வது வார்டை இணைக்கும் வகையில் 20 ஆண்டுகளுக்கு முன்பு காவிரி ஆற்றில் கட்டப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டில் இருந்த நடைப்பாலம் 4 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பகுதி இடிந்து விழுந்தது. ஆபத்தான நிலையில் உள்ள நடைபாலத்தில்  பொதுமக்கள் பயன்படுத்திய நிலையில், மாவட்ட நிர்வாகத்தால் கடந்த வருடம் இடிக்கப்பட்டது. பாலம் இடிந்த உடனே ரூ.18 லட்சம் நிதியை நகராட்சி ஒதுக்கியும் இதுநாள்வரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதுகுறித்து அனைத்துதுறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோரிடம் மனுக்கள் அளித்தும் யாரும் கண்டுகொள்ளவில்லை இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு நகரமன்ற தலைவர் செல்வராஜ் மற்றும் புதிய நகராட்சி ஆணையர் வீரமுத்துக்குமார் ஆய்வு செய்த நிலையில் பாலம் கட்ட நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனையடுத்து இன்று 1-வது வார்டு கவுன்சிலர் ஜெயந்தி ரமேஷ் தலைமையில் 100-க்கு மேற்பட்ட பொதுமக்கள் தண்ணீர் இல்லாத வறண்ட காவிரியில் இறங்கி பாலம் கட்டித் தரக்கோரி கண்டனம் முழக்கமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நடவடிக்கை எடுக்காத மாவட்ட நிர்வாகம், எம்.பி, எம். எல்.ஏ,  மயிலாடுதுறை நகர மன்ற தலைவர் மற்றும் ஆணையரை கண்டித்து கண்டனம் முழக்கமிட்டனர். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பாலம் கட்ட ரூ.18 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டும், பாலத்தை இடித்த நகராட்சி நிர்வாகம், பாலம் கட்ட நடவடிக்கை எடுக்காமல் பொதுப்பணித்துறைதான் பாலம் கட்ட வேண்டும் என்று கையை விரிப்பதாகவும், ரூ.18 லட்சம் நிதி எங்கே என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story