மூதாட்டியை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை
மயிலாடுதுறை கொத்தத்தெருவை சேர்ந்தவர் தீனதயாளன்(66) இவரது மனைவி மீனாட்சி(65) இருவருக்கும் கருத்துவேறுபாடு இருந்த நிலையில் தீனதயாளன் மாரியம்மாள் என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு அவருடன் சேர்ந்து வாழ்ந்துள்ளார். அதனால் மீனாட்சி கணவரை விட்டு பிரிந்து தனது பெற்றோர் வீட்டில் வசித்தவர். ஜீவனாம்சம் கேட்டு குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து அவருக்கு ஜீவனாம்சம் கொடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதனையடுத்து மீனாட்சி கணவர் தீனதயாளனிடம் ஜீவனாம்சம் கேட்டு அவரது வீட்டிற்கு 25.02.2017 அன்று சென்றபோது தீனதயாளன், அவரது இரண்டாவது மனைவியின் மகன் செந்தில்(43) இருவரும் அரிவாளால் வெட்டி மீனாட்சியை கொலை செய்தனர். இது குறித்து மயிலாடுதுறை போலீசார் வழக்கு பதிவு செய்து தீனதயாளன், செந்தில் இருவரையும் கைது செய்தனர். இந்த வழக்கு மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்துவந்தது. இந்நிலையில் கடந்த 2022ம் ஆண்டு தீனதயாளன் இறந்தார். இன்று இறுதி விசாரணைக்கு வந்த இவ்வழக்கில் மூதாட்டியை கொலை செய்த செந்திலுக்கு ஆயுள்தண்டனை மற்றும் ஐந்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்தும் அபராதத்தை கட்ட தவறினால் மேலும் ஓர் ஆண்டு சிறை தண்டனை விதித்தும் மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி விஜயகுமாரி உத்தரவிட்டார்.
Next Story



