வாகன ஓட்டிகளுக்கு தலைகவச விழிப்புணர்வு பேரணி
இருசக்கர வாகனத்தில் செல்லும்பொழுது விபத்துகள் ஏற்பட்டால் தலையில் அடிபடுவதன் காரணமாக உயிர் இழப்புகளின் சதவிகிதம் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க தமிழக அரசு இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்காக பல்வேறு வகையில் வட்டார போக்குவரத்து துறை சார்பில் பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் மோட்டார் வாகன போக்குவரத்து துறை சார்பில் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கிய பேரணியை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில் காவல்துறையினர், தனியார் மோட்டார் வாகன நிறுவன ஊழியர்கள்,மாணவர்கள் பங்கேற்று ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி இருசக்கர வாகனத்தில் பேரணியாக சென்றனர். தொடர்ந்து பேரணி முக்கிய வீதிகள் வழியாக சென்று மமிலாடுதுறை மோட்டார் வாகன அலுவலகத்தில் நிறைவடைந்தது. இந்நிகழ்வில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் ராம்குமார் விசுவநாதன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து பிரதான சாலையில் தலை கவசம் அணியாமல் சென்றவர்களுக்கு அறிவுரை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்திய மாவட்ட ஆட்சியர் அவ்வழியே தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகனத்தில் வந்தவர்களுக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்துக்களை தெரிவித்து பாராட்டினார்
Next Story





