தாட்கோ நிலத்தில் இறால் பண்ணை மக்கள் எதிர்ப்பு

தரங்கம்பாடி அருகே ராஜூவ்புரம் பகுதியில் தாட்கோ நிலத்தில் இறால் குட்டை அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு திடீர் உண்ணாவிரத தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் வட்டாட்சியர் பேச்சுவார்த்தை
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே ராஜூவ்புரம் பகுதியில் தாட்கோவிற்கு சொந்தமான 200 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலம் உள்ளது. இப்பகுதியில் மத்திய அரசின் திட்டத்தின் கீழ் தமிழக அரசின் தாட்கோ நிறுவனத்தின் சார்பாக நவீன இறால் வளர்ப்பு மையம் அமைப்பதற்கான பணிகள் துவங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இப்பகுதியில் தனியாரால் அமைக்கப்பட்ட இறால் குட்டைகளால் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு சுற்றுவட்டார பகுதியில் மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகியுள்ள நிலையில் இறால்குட்டை கழிவுநீர் வாய்க்கால்களில் வெளியேறி இப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களும் பயனற்று போனது. இந்நிலையில் இப்பகுதியில் உள்ள தாட்கோ நிலத்தில் மத்திய அரசின் திட்டத்தின் கீழ் தமிழக தாட்கோ நிறுவனம் சார்பாக நவீன இரால் வளர்ப்பு மற்றும் உற்பத்தி மையம் அமைக்கப்பட்டால் விவசாயம் மற்றும் விவசாயக் கூலி வேலையை நம்பியுள்ள ராஜூவ்புரம் பகுதி மக்கள் தங்கள் பகுதியில் தாட்கோ மூலம் புதிய இறால் குட்டைகளோ அல்லது அரசு சார்ந்த இறால் வளர்ப்பு மையங்களோ அமைக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்து திடீர் தொடர் உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்தனர்.மேலும் அப்பகுதியில் பந்தல் அமைத்து 200க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரத போராட்டத்தை துவங்கினர். போராட்டத்தில் ஈடுபடும் மக்களுக்கு ஆதரவாக வளரும் தமிழகம் கட்சியின் தலைவர் பட்டாபிராமன் அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் மாவட்ட செயலாளருமான பவுன்ராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டு போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுக்கு ஆதரவு தெரிவித்தனர். தகவல் அறிந்து வந்த தரங்கம்பாடி வட்டாட்சியர் சதீஷ் பேச்சுவார்த்தை நடத்தி பொதுமக்களின் கோரிக்கை குறித்து அரசுக்கு தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதுவரை இறால் குட்டை தொடர்பாக எவ்வித பணிகளும் நடைபெறாது எனவும் விரைவில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணப்படும் எனவும் உறுதியளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
Next Story