அரசு அலுவலகங்கள் முன் தீக்குளிப்பா போலீசுக்கு பயிற்சி
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கண்காணிப்பாளர் அலுவலகம், காவல்நிலையம் முன்பாக பல்வேறு காரணங்களுக்காக திடீர் தற்கொலை முயற்சி சம்பவம் நடைபெற்றுவருகிறது. சில சமயங்களில் தீக்குளிக்க முயற்சிப்பவர்களை தடுத்து காப்பாற்றும்போது காவலர்களுக்கும் தீக்காயம் ஏற்பட்டுவிடுகிறது. தற்கொலை முயற்சி சம்பவங்களில் ஈடுபடுபவர்கள்மீது கடுமையான சட்டப்பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவுசெய்யப்படுகிறது. இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறும் போது காவல்துறையினர் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் மீட்பு அலுவல் தொடர்பாக பயிற்சி அளிக்கும் விதமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் பணிபுரியும் அனைத்து நிலை காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை மற்றும் சுகாதாரம் மற்றும் குடும்ப நல்வாழ்வுத்துறை சார்பில் தீ விபத்துகளை கையாளுதல் மற்றும் பல்வேறு அவசர நிலைகளின் போது முதலுதவி அளித்தல் தொடர்பான பயிற்சி மயிலாடுதுறை சாய் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் தலைமை வகித்து துவங்கி வைத்து அவசர காலங்களை கையாளுதல் தொடர்பாக காவலர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கினார். ஒவ்வொரு துறை சார்பாக அளிக்க வேண்டிய முதலுதவி சிகிச்சைகள் மற்றும் மேற்கொள்ள வேண்டிய துரித நடவடிக்கைகள் குறித்து செயல்முறை விளக்கமளிக்கப்பட்டது. இந்த பயிற்சியில் டிஎஸ்பிக்கள் பாலாஜி, அண்ணாதுரை, கிருஷ்ணன் மற்றும் மாவட்டத்தில் பணிபுரியும் 8 காவல் ஆய்வாளர்கள், 21 உதவி ஆய்வாளர்கள், 117 காவலர்கள் மற்றும் 74 ஊர்க்காவல் படையினர் என 220 பேர் கலந்து கொண்டனர்.
Next Story




