ஒன்பதாம் வகுப்பில் ஃபெயில் ஆக்கி டிசி கொடுத்த பள்ளி

மயிலாடுதுறையில் இயங்கிவரும் அரசு உதவிபெறும் பள்ளியில் 9-ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சிபெறாத மாணவிகளை உடனடி தேர்வு எழுத அனுமதிக்காமல், பள்ளிக்கல்வித்துறை உத்தரவை மீறி டிசி கொடுத்து கட்டாயமாக வெளியேற்றிய பள்ளி நிர்வாகம்:- மாவட்ட ஆட்சியரிடம் இந்திய மாணவர் சங்கத்தினர் புகார்.
. மயிலாடுதுறை நகரில் இயங்கிவரும் செயின்ட் பால்ஸ் அரசு உதவிபெறும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 9-ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சிபெறாத மாணவிகளுக்கு உடனடி தேர்வு நடத்தாமல், தேர்வில் தோல்வி அடைந்ததாக குறிப்பிட்டு மாற்றுச் சான்றிதழை பள்ளி நிர்வாகம் கட்டாயப்படுத்தி அளித்து வெளி்யேற்றியுள்ளது. ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை அதே பள்ளியில் படித்த மாணவிகளை வெளியேற்றியுள்ளது மனிதாபிமான அற்ற செயல். அதே பள்ளியில் அந்த ஆறு மாணவிகளும் 9-ஆம் வகுப்பு பயிலவேண்டும் என பெற்றோர் விடுத்த கோரிக்கையையும் பள்ளி நிர்வாகத்தினர் மறுத்துள்ளனர். அரசு அதிகாரிகள் எடுத்துக்கூறியும் ஏற்கவில்லை இதனால், மாணவிகளும், பெற்றோரும் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளனர். 9-ஆம் வகுப்பு தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்தி, உடனடி மறு தேர்வில் அவர்களை தேர்ச்சி பெறச் செய்ய பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தலை மாவட்ட கல்வித்துறை எடுத்துக் கூறியும் அப்பள்ளி புறக்கணித்துள்ளது. இதுகுறித்து இந்திய மாணவர் சங்கத்தினர் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்திடம் மனு அளித்துள்ளனர். பள்ளி நிர்வாகம் கவனம் செலுத்தி பாதிக்கப்பட்ட மாணவர்களை வியாழக்கிழமை தொடங்கவுள்ள உடனடி மாற்றுத் தேர்வினை எழுத அனுமதிக்க நடவடிக்கை எடுத்திட வேண்டும். இதுபோன்ற மாணவர் விரோத செயலில் ஈடுபடும் பள்ளி நிர்வாகத்தின் மீது தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுத்திட வேண்டும் என அந்த மனுவில் கோரிக்கை விடுத்துள்ளனர். மாற்று தேர்வு எழுதும் திட்டமே இல்லை என்று செயின்ட் பால்ஸ் பள்ளி நிர்வாகம் மறுத்து விட்டது. பள்ளியில் படிக்கும் மாணவிகள் இடைநிற்றலை தவிர்க்க தமிழக அரசு போராடிவரும் இவ்வேளையில் இந்தப் பள்ளி நிர்வாகத்தினர் செயல் கண்டிக்கத்தக்கது, என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். இன்று உடனடியாக பள்ளி நிர்வாகம் மாற்றுச் சான்று கொடுத்து அனுப்பிய 6 மாணவிகளையும் அழைத்து மாற்றுத் தேர்விற்கு அனுமதித்துள்ளது
Next Story