ஆலந்துறையப்பர் ஆலய கும்பாபிஷேகம்

:- மயிலாடுதுறை மாவட்டம் நல்லத்துக்குடி கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் பழமை வாய்ந்த குயிலாண்ட நாயகி அம்மை உடனுறை ஆலந்துறையப்பர் கோவில் உள்ளது. சூரிய தோஷம் தீர்க்கும் பரிகார ஸ்தலமாகவும் கருதப்படுகிறது. இக்கோவிலில் அம்பாள் குயில் உருவம் கொண்டு இறைவனை பூஜித்து அருள்பெற்றதாகவும், சமயக்குரவர்களில் ஒருவரான திருநாவுக்கரசு நாயனார் இத்தலத்து இறைவனை இடர் போகுமே என்று அருள் ஆற்றியுள்ளதாகவும், இக் கோயிலைப் பற்றி தேவாரப் பாடல்கள் குறிப்பிட்டுள்ளதால் இக்கோவில் 184வது தேவார வைப்புத்தலம் என கோவில் தலவரலாறு கூறுகின்றன. மேலும் பல்வேறு சிறப்புகளை உடைய இக்கோவில் கடந்த 2002 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து சிதிலமடைந்து இருந்த நிலையில் தற்போது இக்கோவில் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு 22 ஆண்டுகளுக்கு பிறகு இன்று கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. கும்பாபிஷேகத்தையொட்டி கோவில் முன்பு யாகசாலை அமைத்து கடந்த 1 ஆம் தேதி விநாயகர் அபிஷேகத்துடன் விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், நவகிரக ஹோமத்துடன் புனித நீர் அடங்கிய கடங்கள் வைத்து சிவாச்சாரியார்கள் மந்திரங்கள் ஓத முதல் கால யாகசாலை பூஜை தொடங்கியது. இன்று காலை நான்காம் கால யாகசாலை பூஜை நிறைவுற்று மகா தீபாராதனை காட்டப்பட்டது. புனித நீர் அடங்கிய கடங்களை சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து சிவ கைலாய வாத்தியங்கள், மல்லாரி வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக கோவிலை சுற்றி வலம் வந்து விமான கும்பத்தை அடைந்தனர். அங்கு வேத விற்பன்னர்கள் வேத மந்திரங்கள் ஓத கோவில் உட்பிரகாரத்தில் அமைந்துள்ள விநாயகர், முருகர், மகாலட்சுமி, பைரவர், சூரியன், நவக்கிரகங்கள், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட பரிவார தெய்வங்கள் மற்றும் ஆலந்துறையப்பர், குயிலாண்ட நாயகி அம்மன் உள்ளிட்ட கோபுர கலசங்கள் மீது புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இவ்விழாவில் இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் மற்றும் பக்தர்கள் என ஆயிரக்கணக்கான கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
Next Story