மயிலாடுதுறைக்கு புதிய ஆர்டிஓ கட்டிடம் அடிக்கல் அமைச்சர்கள் துவக்கி வைத்தனர்

மயிலாடுதுறையில் புதிதாக வருவாய் கோட்டாட்சியர் அலுவலக கட்டிடம் கட்டும் பணியை அமைச்சர்கள் கோ.வி. செழியன், மெய்யநாதன் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தனர்.
மயிலாடுதுறை கச்சேரி சாலையில் பழமையான கட்டிடத்தில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் இயங்கி வந்தது. இந்நிலையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையால் புதிய கட்டிடம் கட்டுவதற்கு நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. பழமையான கட்டிடம் இடிக்கப்பட்ட நிலையில் இன்று மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகத்திற்கான புதிய கட்டடம் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உயர் கல்வித் துறை அமைச்சர் கோ.வி. செழியன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் பங்கேற்று கட்டிடம் கட்டும் பணியை பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டி துவங்கி வைத்தனர். தரைத்தளம், முதல் தளம் 8,407.87 சதுர அடி பரப்பளவில் அனைத்து வசதிகளும் அடங்கிய கட்டடம் 3.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் எம்எல்ஏக்கள் ராஜகுமார் நிவேதா முருகன் பன்னீர்செல்வம், கோட்டாட்சியர் பொறுப்பு அர்ச்சனா, நகர் மன்ற தலைவர் செல்வராஜ், துணைத்தலைவர் சிவக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story