மயிலாடுதுறைக்கு ரிங் ரோடு வருது எம்எல்ஏ

:- மயிலாடுதுறையில் புறவழிச்சாலை பணிகள் விரைவில் தொடங்கும் என சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.ராஜகுமார் தெரிவித்தார். இதுகுறித்து, மயிலாடுதுறை சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறுகையில், மயிலாடுதுறையில் புறவழிச்சாலை அமைக்க 2010-ஆம் ஆண்டு நான் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தபோது, அப்போதைய முதல்வர் கலைஞர் மு.கருணாநிதியிடம் கோரிக்கை விடுத்திருந்தேன். இதையடுத்து, புறவழிச்சாலைக்கு இடம்; தேர்வு செய்ய திட்டமிடப்பட்டு, மத்திய அரசிடம் அப்போது ஒப்புதல் பெறப்பட்டு நிதி ஆதாரம் பெறப்பட்டது. ஆனால்;, 2011-ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து புறவழிச்சாலை திட்டப்பணிகள் 10 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டது. 2021-ல் மீண்டும் திமுக ஆட்சி அமைந்து, நான் சட்டப்பேரவை உறுப்பினரானவுடன் நடைபெற்ற முதல் பேரவைக் கூட்டத்தொடரிலேயே புறவழிச்சாலை கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தினேன். இதையடுத்து, நில ஆர்ஜித பணிக்காக முதல்கட்டமாக ரூ.58 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனைமேலகரம் தொடங்கி திருவிழந்தூர், உளுத்துக்குப்பை, மணக்குடி, மன்னம்பந்தல், அகரகீரங்குடி வரையில் 16.8 கி.மீ. தூரத்திற்காக திட்டமதிப்பீடு செயல்படுத்த முயற்சி எடுத்தோம். தற்போது 11 கி.மீ. தூரம் நிலம் ஆர்ஜித பணிகள் செய்யப்பட்டள்ளது. மீதமுள்ள இடத்திற்கு நிலம் ஆர்ஜித பணிகள் நடைபெற்று வருகிறது. மயிலாடுதுறை புறவழிச்சாலைக்கு முதல்கட்டமாக 10 கி.மீ. திருவிழந்தூர் ஊராட்சி முதல் மன்னம்பந்தல் மாவட்ட ஆட்சியரகம் வரையில் பணிகள் தொடங்க ரூ.185 கோடி நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டு அதற்கான அரசாணையை தமிழக அரசு ஜூலை 2-ஆம் தேதி வெளியிட்டுள்ளது. ஆனைமேலகரம் முதல் கல்லணை சாலை இணைக்கும் ஒரு கி.மீ. தூரம் இணைக்கப்பட உள்ளது. காவிரி ஆற்றில் பாலம் அமைப்பதற்கான திட்டமதிப்பீடு தயார் செய்யப்பட்டு வருகிறது. புறவழிச்சாலை குறித்த முறையான அறிவிப்பை தமிழக முதல்வர் மயிலாடுதுறை வருகையின்போது வெளியிடுவார். மாப்படுகை, நீடூர் ரயில்வே கேட் மேம்பாலம் அமைப்பதற்கு ரயில்வே துறை அனுமதி வழங்கியுள்ளது. நீடூர் பகுதியில் நிலம் ஆர்ஜிதம் செய்யும் பணிகள் முடிவடைந்தவுடன் அங்கு பாலம் அமைக்கும் பணி தொடங்கும். மாப்படுகை ரயில்வே மேம்பாலம் இந்த ஆண்டு செயலாக்கத்திற்கு வரக்கூடிய வாய்ப்புகள் உள்ளது என்றார்.
Next Story

