திருமணமான நபர் 15 வயது சிறுமியை கடத்தியதால் போக்சோவில் கைது
Mayiladuthurai King 24x7 |7 Sep 2024 3:20 AM GMT
15 வயது சிறுமியை கடத்திய நெய்வேலியை சேர்ந்த திருமணமான நபரை கைது செய்து போக்சோ வழக்குப்பதிவு செய்து மயிலாடுதுறை போலீசார் சிறையிலடைத்தனர்
கடலூர் மாவட்டம் நெய்வேலி கீழ்பாதி பகுதியைச் சேர்ந்தவர் இறைவன் மகன் சேனாதிபதி (வயது 29). இவருக்கு திருமணம் ஆகி ஒரு பெண் குழந்தை உள்ளது. இவர் நெய்வேலி பகுதியில் வசிக்கும் 15 வயது சிறுமியுடன் நெருங்கி பழகி வந்துள்ளார். இதனையறிந்த அந்த சிறுமியின் பெற்றோர், மயிலாடுதுறை அழைத்து வந்து தங்களது உறவினர் வீட்டில் சிறுமியை விட்டுச் சென்றுள்ளனர். இந்த நிலையில் கடந்த 29-ஆம் தேதி மயிலாடுதுறையில் உறவினர் வீட்டில் இருந்த சிறுமி திடீரென மாயமானார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் உறவினர்கள் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்பேரில் மயிலாடுதுறை காவல் ஆய்வாளர் சிவக்குமார் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில், சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி சேனாதிபதி கடத்திச் சென்றது தெரியவந்தது. தொடர்ந்து மயிலாடுதுறை போலீசார் சேனாதிபதியை வலைவீசி தேடி வந்தனர். இதனையடுத்து சேனாதிபதியை நெய்வேலி பகுதியில் கைது செய்த போலீசார் அவரை மயிலாடுதுறை கொண்டு வந்தனர். மேலும் சிறுமியை மீட்டு அவரது பெற்றோரிடம் போலீசார் ஒப்படைத்தனர். இதனைத்தொடர்ந்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் சேனாதிபதியை மயிலாடுதுறை மாவட்ட இளைஞர் நீதி குழுமத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Next Story