திமுக அரசு பொறுப்பேற்று கொண்டதிலிருந்து 2000மாவது கோவில் கும்பாபிஷேகம்நாளை பரசலூரில்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்றபின் 2,000-வது குடமுழுக்கு.  மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி   பரசலூர் வீரட்டேஸ்வரர் கோயிலில் நாளை நடைபெறுகிறது.
. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்றபின், தொன்மையான திருக்கோயில்களைப் புனரமைத்து பாதுகாத்திடும் வகையில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு குடமுழுக்குகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், 2,000-வது குடமுழுக்காக மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் பரசலூர் அருள்மிகு வீரட்டேஸ்வரர் திருக்கோயில் குடமுழுக்கு நாளை (ஆக.30) நடைபெறவுள்ளது. இந்த அறிவிப்பை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு வெளியிட்டுள்ளார். 1,000-வது குடமுழுக்காக சென்னை மேற்கு மாம்பலம் அருள்மிகு காசி விஸ்வநாதர் சுவாமி திருக்கோயில் குடமுழுக்கு 10.09.2023 அன்றும், 1,500-வது குடமுழுக்காக கோயம்புத்தூர் மாவட்டம் கிணத்துக்கடவு வடபுத்தூர் அருள்மிகு வன்னிகுமார சுவாமி திருக்கோயில் குடமுழுக்கு 24.03.2024 அன்றும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. தருமபுரம் ஆதீனத்தின் நிர்வாகக் கட்டுப்பாட்டில் உள்ள திருக்கடையூர் அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோயிலின் உபகோயிலான பரசலூர் அருள்மிகு வீரட்டேஸ்வரர் திருக்கோயிலானது 1,000 ஆண்டுகள் தொன்மையானதாகும். அட்டவீரட்ட தலங்களில் ஒன்றாக போற்றப்படும் இத்திருக்கோயில் தேவாரப் பாடல் பெற்ற திருத்தலமாகும். தட்சன் தன் தவறை உணர்ந்து பரம்பொருள் சிவனே என்று வேத வேள்வி செய்து வழிபட்ட தலமாகும். கடந்த 26.06.2011 அன்று இத்திருக்கோயிலுக்கு குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. 12 ஆண்டுகள் நிறைவு பெற்ற நிலையில் மண்டல மற்றும் மாநில வல்லுநர் குழுக்களின் அனுமதி பெறப்பட்டு ரூ.80.10 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்ட 9 திருப்பணிகள் நிறைவுபெற்றுள்ளன. அதனை தொடர்ந்து 27.08.2024 முதல் யாகசாலை பூஜைகள் தொடங்கப்பட்டு 30.08.2024 நாளை காலை 9.00 மணி அளவில் இத்திருக்கோயிலுக்கு குடமுழுக்கு நடைபெற உள்ளது.
Next Story