ஏக்கருக்கு ரூ.30,000 நிவாரணம் வழங்க வேண்டும்
மயிலாடுதுறை மாவட்டத்தில் ஒரு லட்சத்து 70 ஆயிரம் ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு நாற்றுகள் கதிர் முற்றி விவசாயிகள் அறுவடையை துவங்கிய நிலையில் கடந்த 18ஆம் தேதி பெய்த பருவம் தவறிய கனமழையால் 68,000 ஏக்கர் நெற்பயிர்கள் வயலில் சாய்ந்து நீரில் மூழ்கி சேதம் அடைந்தது. இதில் பெரும்பாலான பயிர்கள் அழுகி முளைக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூர் ஓடக்கரையில் பயிர் சேதங்களை தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நேரில் ஆய்வு செய்தார். அப்போது விவசாயிகள் வயலில் சாய்ந்து அழுகியும், முளைக்கத் துவங்கியுள்ள நெள்பயிர்களை எடுத்து வந்து காண்பித்து கண்ணீர் மல்க வேதனை தெரிவித்தனர். குழந்தையைப் போல் பார்த்து பார்த்து விவசாயிகள் வளர்த்த நெற்பயிர்கள் சேதம் அடைந்துள்ளதை கண்கூடாக பார்க்க முடிவதாக வேதனை தெரிவித்த பிரேமலதா விஜயகாந்த் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசுகையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் ஒரு நாள் பெய்த 22 சென்டிமீட்டர் மழையில் பயிரிடப்பட்ட ஏக்கர் பாதிக்கப்பட்டு 80 ஆயிரம் ஏக்கர் முற்றிலுமாக சேதம் அடைந்துள்ளது. இதை பார்க்கும் போது கண்ணீர் வருகிறது. குழந்தை மாதிரி பார்த்து பார்த்து வளர்த்த பயிர்கள் அறுவடை செய்யும் நேரத்தில் அழிந்து போனால் விவசாயிகளின் நிலை என்ன என்பதை எண்ணி பார்க்க வேண்டும். இன்றைக்கு லஞ்சம் வாங்குபவர்கள் ஊழல் செய்பவர்கள் கனிமவள கொள்ளை அடிப்பவர்கள் கொலைகாரர்கள் வாழும் இந்த பூமியில் வாழும் மக்களுக்கு சோறு போடும் விவசாயிகளின் நிலைமை கேள்விக்குறியாகி உள்ளது. நாங்கள் விவசாய குடும்பத்தில் இருந்து வந்தவர்கள் மக்களிடம் எடுத்துக் கூறி வாய்ப்பு கேட்டபோது மக்கள் புரிந்து கொள்ளவில்லை இன்று விஜயகாந்தை இழந்து விட்டோமே என்று மக்கள் புரிந்து கொண்டுள்ளனர். 2026-ல் நல்ல அரசாங்கத்தை ஏற்படுத்த வேண்டும். நம்ம முதலமைச்சர் எப்பொழுதும் சொல்லும் ஒரே வார்த்தை நானும் டெல்டாகாரன்தான் என்று வசனம் பேசிவிட்டு போய்விடுகிறார். முதலமைச்சர் முதல் அமைச்சர்கள் வரை ஒருவரும் வந்து பயிர் சேதத்தை பார்க்கவில்லை என்று விவசாயிகள் கூறுகின்றனர். விவசாயிகளுக்கு ஏன் உரிய நிதி தரவில்லை. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு உடனடியாக தர வேண்டும். ஒரு ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும், 22 சதவீதம் ஈரப்பதம் உள்ள நெல்லை அரசாங்கம் கொள்முதல் செய்ய வேண்டும், மத்திய மாநில அரசுகள் உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும், மத்திய அரசு நிதி தரவில்லை என்று கூறி மாநில அரசு தப்பிக்க பார்க்காமல் சாக்குப் போக்கு சொல்லாமல் டெல்டா காரன் என்று வசனம் பேசாமல் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் பக்கம் நிற்க வேண்டும். குடியரசு தினத்தில் பயிர்கள் பாதிக்கப்பட்டது குறித்து கவர்னரிடம் மனு அளிக்க உள்ளோம். வேங்கைவயல் விவகாரத்தில் பட்டியலின மக்களே குடிநீர் தொட்டியில் மலம் கலந்ததாக கூறப்படுவது வழக்கை திசை திருப்ப ஆளுங்கட்சியினர் நடத்தும் நாடகம். இதில், சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும். புதிதாக கட்சி தொடங்கியுள்ள விஜய் குறித்த கேள்விக்கு தற்பொழுது தான் அரசியல் களம் வந்துள்ளார். மக்களை நேரிடையாக வந்து சந்திக்க வேண்டும் நாங்கள் அரசியலுக்கு வந்து 20 வருடங்கள் ஆகிறது, அதேபோல் நிறைய தேர்தலை சந்திக்க வேண்டும் என்றார். கல்லூரி மாணவி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரன் முதலமைச்சர் அனுதாபி என்று சொல்கிறார் சபாநாயகர் தம்பி என்று சொல்கிறார், யாராக இருந்தாலும் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். ஆளுநரின் தேநீர் விருந்து தவெக தலைவர் விஜய் கலந்து கொள்ளக் கூடாது என்று துரை வைகோ கூறியதற்கு பதில் அளித்த பிரேமலதா தேனீர் விருந்துக்கு போவது அவரவர்களின் விருப்பம் அவர் அவர்களின் கருத்து அதற்கு நான் பதில் சொல்ல முடியாது என்றார்.
Next Story



