கிளியனூரில் ரூ 45 லட்சத்தில் வேளாண் விளைபொருள் சேமிப்பு கிடங்கு திறப்பு

:- மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த கிளியனூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கூட்டுறவுத்துறை சார்பில் வேளாண் விளைவு பொருள் சேமிப்பு மற்றும் விற்பனை மைய கட்டிட திறப்பு விழா இன்று நடைபெற்றது. ரூ 45 லட்சம் மதிப்பீட்டில் 2000 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்ட இந்த கட்டடத்தை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ‌.மெய்யநாதன் திறந்து வைத்து, 6 மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு தலா ரூ 3 லட்சம் என மொத்தம் ரூ.18 லட்சம் கடன் உதவிக்கான காசோலைகளை பயனாளிகளுக்கு வழங்கினார். முன்னதாக, மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு விலை இல்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சியை, அமைச்சர் மெய்யநாதன் தரங்கம்பாடி தெரசா மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தொடக்கி வைத்து, மாணவர்களுக்கு மஞ்சள் பைகளை வழங்கினார். அப்போது பிளாஸ்டிக் ஒழிக்க வேண்டும் என்று வலியுறுத்தும் இந்த நிகழ்ச்சியிலேயே பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்படுவது வருத்தம் அளிப்பதாக கூறினார். இதில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் நிவேதா எம்.முருகன், ராஜகுமார், பன்னீர்செல்வம் மற்றும் உள்ளாட்சித் துறை பிரதிநிதிகள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Next Story