மகளிர் சுய உதவி குழுவிற்கு ரூ.72 கோடி நிதி உதவி

செம்பனார்கோவிலில் உலக மகளிர் தின விழாவையொட்டி மகளிர் திட்டம் சார்பில் 1018 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.72 கோடி மதிப்பிலான கடனுதவிகளை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் மற்றும் எம்எல்ஏக்கள் வழங்கினர்:-
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவிலில் தனியார் திருமண மண்டபத்தில் உலக மகளிர் தின விழாவையொட்டி மகளிர் திட்டம் சார்பில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடனுதவி வழங்கும் விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தலைமையில் எம்எல்ஏக்கள் நிவேதா முருகன், பன்னீர்செல்வம், ராஜகுமார் ஆகியோர் 1018 மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூபாய் 72 கோடி மதிப்பீட்டில் கடனுதவிகளை வழங்கினர். தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மூலமாக தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மற்றும் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மயிலாடுதுறை மாவட்டத்தில் 7716 சுய உதவிக்குழுக்களில் 95,998 உறுப்பினர்கள் உள்ளனர். புதிய குழுக்களுக்கு ஆதார நிதியாக ரூ.15,000, வழங்கப்படுகிறது. இந்தாண்டில் 102 குழுக்களுக்கு ரூ.15.30 இலட்சம் ஆதார நிதியாக விடுவிக்கப்பட்டுள்ளது. தொழில் செய்யும் குழுக்களுக்கு சமுதாய முதலீட்டு நிதியாக ரூ.1,50,000, வழங்கப்படுகிறது. இந்தாண்டில் 136 குழுக்களுக்கு ரூ.2.34 கோடி சமுதாய முதலீட்டு நிதியாக வழங்கப்பட்டுள்ளது. வங்கி கடன் நிதி இணைப்பாக குறைந்தபட்சம் ரூ.3 இலட்சம் முதல் அதிகபட்சமாக ரூ.20 இலட்சம் வரை குறைந்த வட்டியில் வங்கி கடன் வழங்கப்படுகிறது. இந்தாண்டில் நாளது தேதி வரை ரூ.558 கோடி வங்கி கடனாக மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. உலக மகளிர் தின விழாவினையொட்டி இன்று மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கி கடன் இணைப்பு உட்பட இதர நலத்திட்ட உதவிகளையும் சேர்த்து 13753 உறுப்பினர்களை கொண்ட 1018 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.72 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் மகளிர் திட்டம் திட்ட அலுவலர் சீனிவாசன், பேரூராட்சி தலைவர்கள் சுகுண சங்கரி, பூங்கொடி, கண்மணி, உதவி திட்ட அலுவலர் செல்வகணபதி, வாழந்து காட்டுவோம் மாவட்ட செயல் அலுவலர் வேல்முருகன் மற்றும் அரசு அலுவலர்கள், முன்னாள் உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
Next Story