கரூரில் அரசு பேருந்துகளில் 'தமிழ்நாடு' ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர் 9 பேர் கைது

கரூரில் அரசு பேருந்துகளில் 'தமிழ்நாடு' ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர் 9 பேர் கைது
கரூரில் அரசு பேருந்துகளில் 'தமிழ்நாடு' ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர் 9 பேர் கைது தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் பேசி வரும் திமுக அரசு, தமிழக அரசு இயக்கி வரும் பேருந்துகளில் தமிழ்நாடு அரசு பேருந்து என்பதற்கு பதிலாக அரசு பேருந்து என்ற எழுத்துக்களை மட்டும் பதிவு செய்து இயக்கி வருகிறது. இதற்கு நாம் தமிழர் கட்சியின் சார்பில் எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக இன்று கரூர் பேருந்து நிலையத்தில் நாம் தமிழர் கட்சியினர் சார்பில் மாநில மருத்துவர் அணி செயலாளர் கருப்பையா, மற்றும் கரூர் மண்டல செயலாளர் ராஜேஷ் கண்ணா ஆகியோர் தலைமையில் அரசு போக்குவரத்து கழகம் என்ற எழுத்திற்கு முன்பு 'தமிழ்நாடு' என்ற பெயர் இல்லை என்ற கோரிக்கையுடன், பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த அரசு பேருந்துகளில் தமிழ்நாடு என்ற ஸ்டிக்கர் ஒட்ட முயன்றனர். அப்போது அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தால் கரூர் போலீசார் போராட்டக்காரர்கள் ஒட்டிய தமிழ்நாடு என்ற ஸ்டிக்கரை உடனடியாக கிழித்ததோடு மேலும் பல பேருந்துகளில் ஒட்டுவதற்கு தடை செய்தனர். ஆயினும் காவல்துறையின் தடுப்பை மீறி அரசு பேருந்தின் பக்கவாட்டில் தமிழ்நாடு அரசு என்ற ஸ்டிக்கரை ஒட்டி, திமுக அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பி போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் ஈடுபட்ட 9 பேரை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்து தனியார் திருமண மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர். இதனால் பேருந்து நிலைய வளாகப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.
Next Story