மயிலாடுதுறையில் 12 பக்தர்கள் ராமேஸ்வரம் காசிக்கு பயணம்
மயிலாடுதுறையில் ராமேஸ்வரம் முதல் காசி வரை ஆன்மீக யாத்திரைக்கு 12 பக்தர்களுடன் புறப்பட்ட வாகனத்தை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி கொடியசைத்து வழி அனுப்பி வைத்தார்
தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் அறிவிப்பின்படி ராமேஸ்வரம் முதல் காசி வரை ஆன்மீக பயணம் மேற்கொள்ளும் பக்தர்கள் கடந்த ஆண்டு முதல் அனுப்பிவைக்கப்பட்டு வருகின்றனர். அவ்வகையில் கடந்த ஆண்டு மயிலாடுதுறை மாவட்டத்தில் இருந்து 18 பேர் தேர்வு செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்நிலையில் இந்த ஆண்டுக்கு புனித யாத்திரை செல்லும் பக்தர்களை அனுப்பிவைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதற்காக மாவட்டம் முழுவதிலும் இருந்து தேர்வு செய்யப்பட்ட 12 பேர் மயிலாடுதுறை திருஇந்தளூர் பரிமள ரெங்கநாதர் கோயிலுக்கு வரவழைக்கப்பட்டு, அங்கிருந்து வேன் மூலம் ராமேஸ்வரத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பக்தர்களுடன் புறப்பட் வேனை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி கொடியசைத்து வழியனுப்பி வைத்தார்.
அவர்களுடன் அறநிலையத்துறை அலுவலர்கள் உடன் சென்றனர். இந்நிகழ்ச்சியில், இந்துசமய அறநிலையத்துறை இணை ஆணையர் மோகனசுந்தரம் உட்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர். புனித யாத்திரை மேற்கொண்ட பக்தர்கள் வருகிற 28-ஆம் தேதி மீண்டும் யாத்திரையை முடித்துக்கொண்டு மயிலாடுதுறை திரும்ப உள்ளார்கள்.