திருக்குறள் பேரவையின் 38 ஆம் ஆண்டு விழா பேரணி
பேரணி
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட நகரத்தார் மண்டபம் அருகே, திருவள்ளுவர் சிலை ஊர்வலத்துடன் திருக்குறள் விழிப்புணர்வு பேரணி திருக்குறள் பேரவை பொதுச் செயலாளர் மேலை. பழனியப்பன் தலைமையில் நடைபெற்றது. வாழ்வியல் நாயகன் வள்ளுவ பெருந்தகை மனித சமுதாயம் சிறந்து வாழ்வதற்காக பல்வேறு கருத்துக்களை குறள் வடிவத்தில் 2000 ஆண்டுகளுக்கு முன்பே அளித்துவிட்டு சென்றிருக்கிறார்.
அவரது கருத்துக்களின் அடிப்படையில், வாழ்க்கையை நகர்த்திச் சென்றால் வாழ்வே இன்பமயம் ஆகும். இதனை வலியுறுத்தும் வகையில் திருக்குறள் பேரவையின் தலைவர் தங்கராசு, செயலாளர் மேலை. பழனியப்பன், சுவாமி சித்த குருஜி,தமிழ் வளர்ச்சி துறை ஜோதி, மாநகராட்சி உறுப்பினர் ஸ்டீபன் பாபு, சித்தர் சபை சிவராமன், சுமதி சிவசுப்பிரமணியன், பெங்களூர் வீரப்பன், திருச்சி ஆதப்பன், காரைக்குடி ஜெயங்கொண்டான் உள்ளிட்ட பல்வேறு தமிழ் அறிஞர்களும், ஊர் முக்கியஸ்தர்களும் இந்த பேரணியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்த பேரணி ஜவகர் பஜார் வழியாக முக்கிய வீதிகளில் சென்று மீண்டும் நகரத்தார் மண்டபத்திற்கு வந்து அடைந்தது. இந்த நிகழ்ச்சியில் பள்ளி, கல்லூரி, மாணவ- மாணவியர், ஊர் பொதுமக்கள், தமிழ் ஆர்வலர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு விழிப்புணர்வு பேரணியை சிறப்பித்தனர்.