மது குடிக்க பணம் கேட்டு தர மறுத்ததால், தாக்கிய நபர் மீது வழக்கு பதிவு
காவல் நிலையம்
கரூர் மாவட்டம், பசுபதிபாளையம், ராமானுர் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் ஐயப்பன் வயது 50. இவர் ஏப்ரல் 28ஆம் தேதி இரவு 9 மணி அளவில், கொளந்தா கவுண்டனூர் பகுதியில் செயல்படும் டாஸ்மாக் கடை அருகே நின்று கொண்டு இருந்தார்.
அப்போது அங்கு வந்த, பசுபதிபாளையம் தெற்கு, பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் மகன் அருண் வயது 34 என்பவர், ஐயப்பனிடம் மது குடிக்க பணம் கேட்டுள்ளார். ஐயப்பன் பணம் தர மறுத்துள்ளார். இதனால், கோபமடைந்த அருண், ஐயப்பனை தகாத வார்த்தை பேசி, கைகளால் தாக்கி, மிரட்டல் விடுத்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக ஐயப்பன் அளித்த புகாரின் பேரில், அன்றைய தினமே சம்பவ இடத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையின் முடிவில் அருணை தேடி வந்தனர். ஆயினும் அருண் தப்பி ஓடி தலைமறைவாகிவிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று ஐயப்பனை தகாத வார்த்தை பேசி தாக்கியதாக அருண் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் பசுபதிபாளையம் காவல்துறையினர்.