பள்ளி திறந்த முதல் நாளிலேயே மாணவர்களுக்கு ஆதார் அட்டை
மயிலாடுதுறையில் மாணவர் சேர்க்கையில் முதலிடம் பிடித்த அரசு உதவிபெறும் பள்ளியில் முதல்நாளியேயே மாணவர்களுக்கு ஆதார் அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான ஸ்ரீகுருஞானசம்பந்தர் அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு மழலையர் பள்ளி மற்றும் தொடக்கப்பள்ளியில் 700 மாணவர்கள் பயிலுகின்றனர். இந்த பள்ளியில் மயிலாடுதுறை ஒன்றியத்தில் நிகழாண்டுக்கான மாணவர் சேர்க்கையில் 97 மாணவர்களை பள்ளியில் சேர்த்து ஒன்றியத்தில் முதலிடம் பிடித்துள்ளது. இதையடுத்து, இப்பள்ளியில் பள்ளி சேர்க்கை முதல் நாளன்றே பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஆதார் முகாம் நடைபெற்றது.
5 வயது நிரம்பிய மாணவர்களது கை ரேகை மற்றும் கண் கருவிழி பதிவு செய்து, புகைப்படம் எடுத்து ஆதார் சேர்க்கை நடைபெற்றது. பள்ளித் தலைமை ஆசிரியர் வெங்கடேசன் தலைமையில் நடைபெற்ற இந்த முகாமை வட்டார கல்வி அலுவலர்கள் சோம.அண்ணா, உமா ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி தொடக்கி வைத்தனர். இதில், ஏராளமான மாணவர்களுக்கு புதிய ஆதார் அட்டை எடுக்கப்பட்டது. தொடர்ந்து பள்ளி முதல் நாள் அன்றே மாணவர்களுக்கான பாட புத்தகங்களை வட்டார கல்வி அலுவலர்கள் வழங்கினர்.