மறுபடியும் மோடி என்றால் மக்கள் தெருகோடி - சீமான் காட்டம்

மறுபடியும் மோடி என்றால் மக்கள் தெருகோடி - சீமான் காட்டம்

சீமான் பிரசாரம் 

50 ஆண்டுகள் காங்கிரஸ் ஆண்ட ஆட்சியில் ரூ.56 லட்சம் கோடியாக இருந்த இந்தியாவின் கடன், மோடி ஆட்சிக்குவந்த 10 ஆண்டுகாலத்தில் அது ரூ.156 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. மறுபடியும் மோடி ஆட்சிக்கு வந்தால் மக்கள் தெருக்கோடிக்குத்தான் செல்ல வேண்டும் என சீமான் பேசினார்.

மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் பி.காளியம்மாளை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மயிலாடுதுறையில் பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது: இந்தியாவில் காங்கிரஸ், பாஜக ஆகிய இரண்டு கட்சிகளில் இருந்தும் பிரதமராக இருந்துள்ளனர். கடந்த மக்களவைத் தேர்தலில் திமுக 39 இடங்களை கைப்பற்றியது. அப்போதும் மோடிதான் பிரதமரானார். அவர் நம் மக்களுக்காக ஒன்றும் செய்ததில்லை. காங்கிரஸ் மற்றும் பாஜக காவிரியில் தண்ணீர் கேட்டு தர மறுக்கிறது. நமது உரிமையை பறித்து கொள்பவர்களுக்கும், உரிமையை தர மறுப்பவர்களுக்கும் எதற்கு வாக்களிக்க வேண்டும்? காவிரி தண்ணீர் கிடைக்காமல் போனதற்கு காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டு. முல்லை பெரியாரில் இருந்து தண்ணீரை திமுக அரசால் பெற்று தர முடியவில்லை.

கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆளும் கேரள மாநிலத்தில் இருந்து தண்ணீர் கேட்டால் அடித்து விரட்டுகிறார்கள். காங்கிரஸ் பல்வேறு உரிமைகளை பறிக்கும்போது தமிழ்நாட்டில் ஆட்சியில் இருந்தது திமுகதான். நான் இதுவரை ஐந்து முறை சிறைபட்டுள்ளேன். ஒவ்வொரு முறையும் எனக்கு சிறைக்குள் தனி சிறை வைப்பார்கள். மத்திய அரசு தனிப்பட்ட பெரும் முதலாளிகளின் வளர்ச்சியை நாட்டின் வளர்ச்சி எனக் காட்டுகிறார்கள். திட்டமிட்டு நடத்தப்பட்ட மணிப்பூர் கலவரம் குறித்து பிரதமர் மோடி வருத்தம் கூட தெரிவிக்கவில்லை. நாட்டின் முதல் குடிமகனான துரௌபதி முர்முவுக்கு இந்த ஆட்சியில் மரியாதை இல்லை.

பசுவை புனிதமாக பேசுபவர்கள் வெளிநாடுகளுக்கு 24 லட்சம் டன் மாட்டுக்கறியை ஏற்றுமதி செய்துள்ளனர். 50 ஆண்டுகள் காங்கிரஸ் ஆண்ட ஆட்சியில்ரூ.56லட்சம் கோடி இந்தியாவின் கடன், மோடி ஆட்சிக்குவந்த 10 ஆண்டுகாலத்தில் அது ரூ.156 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. மறுபடி மோடி ஆட்சிக்கு வந்தால் மக்கள் தெருக்கோடிக்குத்தான் செல்ல வேண்டும். இலங்கை அதிபர் பொதுமக்களால் விரட்டப்பட்ட சம்பவம் வெறும் ட்ரெய்லர்தான். அதே நிலை இந்தியாவுக்கும் நிச்சயமாக வரும். அந்த நிலைமை நம்நாட்டு தலைவர்களுக்கும் நிச்சயமாக வரும் என தெரிவித்தார்.

இந்தியாவின் பொருளாதார வீழ்ச்சிக்கு காரணம் பண மதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி வரிதான் என உலக வங்கி சொல்கிறது. உலக வங்கியின் கருத்துக்கு சங்கிகளிடம் பதில் இல்லை. 10 ஆண்டுகள் ஆட்சி செய்த பின்னர் புதிய இந்தியாவை உருவாக்குவதற்கான காலம் வந்துவிட்டதாக நரேந்திர மோடி தற்போது தெரிவிக்கிறார். எங்களுக்கு வாக்களிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. தயவுசெய்து மோடிக்கு வாக்களிக்காதீர்கள். ஒரே நாடு, ஒரே தேர்தல் என்கிறது பாஜக அரசு. ஒரே தேர்தல் நடத்தினால் நாட்டில் வறுமை ஒழிந்திடுமா?. பல நாடுகளின் ஒன்றியம் தான் இந்தியா. ஒரே நாடு என்றால் தண்ணீர் ஏன் நம் மக்களுக்கு கிடைக்கவில்லை? இறுதியாக தொகுதியின் பெயரை கூறும் போது மயிலாடுதுறை என்பதற்கு பதில் மயிலாடும்பாறை சீமான் என தெரிவித்ததால் சலசலப்பு ஏற்பட்டது. பிறகு மயிலாடுதுறை என திருத்திக்கொண்டார்.

Tags

Next Story