மாற்றுப் பயிர் சாகுபடி : விவசாயிகள் கருத்தரங்கம்
மாற்று பயிர் குறித்த சாகுபடி
கடும் வறட்சி காலங்களிலும், கன மழை காலங்களிலும் அதிக பாதிப்பு ஏற்படாமல் விவசாயிகளுக்கு சமநிலையை ஏற்படுத்தும் விதமாக "காவேரி வேளாண் மண்டலத்தில் பல்நோக்கு விவசாயம்" என்ற தலைப்பில், மயிலாடுதுறையில் பயிலரங்கு நடைபெற்றது.
நெல் பண்ணைகளில் நெல் மட்டும் பயிரிடாமல், கன மழையை தாங்கி நிற்கும் பயிர் வகைகள், வறட்சியை தாங்கி வளரும் பயிர் வகைகளை பயிரிடுவதன் மூலம் எந்த பருவநிலையிலும் விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டம் ஏற்படாது என இந்த பயிலரங்கில் விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
இதில் வேளாண் துறை அதிகாரிகள் கலந்து கொண்டு, நெல் பண்ணையில் நிலக்கடலை, உளுந்து, பயறு, காய்கறி வகைகள், மலர் செடிகள், பழ வகைகளை மண்ணின் தன்மையை அறிந்து பயிரிடுவதன் மூலம் விவசாயிகள் தங்களை நஷ்டத்தில் இருந்து தற்காத்துக் கொள்ளலாம் என அறிவுறுத்தினர்.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம், சென்னை தமிழ்நாடு மாநில உயர்கல்வி குழு உடன் இணைந்து வீரசோழன் உழவன் உற்பத்தி நிறுவனம் இந்த நிகழ்ச்சியை நடத்தியது. இதில் நூற்றுக்கு மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.