மயிலாடுதுறை அருகே பழமையான புளியமரம் வேறோடு சாய்ந்தது
மரத்தை அகற்றும் பணி
மயிலாடுதுறை மாவட்டத்தில் இரண்டு நாட்களாக மிதமான மழை தொடர்ந்து நீடித்து வருகிறது. கனமழை காரணமாக மயிலாடுதுறையில் இருந்து மணல்மேடு செல்லும் பிரதான சாலையில் பல்லவராயன்பேட்டை பகுதியில் சாலை ஓரம் இருந்த 75 ஆண்டு பழமையான பெரிய புளியமரம் ஒன்று வேறோடு சாய்ந்து அருகிலிருந்த மின் கம்பத்தில் விழுந்தது.
இதனால் மின் கம்பிகள் அறுந்ததோடு, மின்கம்பமும் முறிந்து சாலையில் விழுந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நெடுஞ்சாலைத் துறையினர் மற்றும் மின்வாரிய ஊழியர்கள் மரத்தை ஜேசிபி இயந்திரம் மூலம் அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். அப்பகுதியில் தற்காலிகமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
ஒரு மணி நேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது அப்பகுதியில் போக்குவரத்து சீரடைந்துள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று காலை 6 மணிமுதல் மாலை 4 மணிவரை பெய்த மழையளவு மயிலாடுதுறை 39 மி.மீ, மணல்மேடு 27 மி.மீ, சீர்காழி 45.60 மி.மீ, கொள்ளிடம் 48.40 மி.மீ, தரங்கம்பாடி 40.10 மி.மீ, செம்பனார்கோவில் 59.80 மி.மீ, மழை பெய்துள்ளது சராசரியாக 43.32மி.மீ மழையும் பதிவாகியுள்ளது.