நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிப்பதாக நல சங்கம் சார்பில் அறிவிப்பு !
நாடாளுமன்றத் தேர்தல்
வீடுகள் தோறும் கருப்புக்கொடி கட்டி, நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிப்பதாக வெண்ணைமலை பகுதி இனாம் நில குடியிருப்பவர்கள் நல சங்கம் சார்பில் அறிவிப்பு. கரூர் அடுத்த காதப்பாறை ஊராட்சியில், வெண்ணமலை பாலசுப்ரமணி திருக்கோவில் உள்ளது.
இந்த கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் ஏராளமாக உள்ளது. கோவிலின் அருகாமையில் உள்ள பகுதியில் உள்ள நிலங்கள் இனாம் நிலங்கள் என அரசின் சார்பில் அறிவிப்பு செய்யப்பட்டதால், அந்த நிலங்கள் பலரது கைக்கு மாறி பத்திரப்பதிவு நடந்துள்ளது.
மேலும், அப்பகுதியில் இடங்கள் வாங்கி, பத்திர பதிவு செய்து, வீடு கட்டி ,சொத்து வரி, வீட்டு வரி, குடிநீர் வரி, மின் கட்டணம் ஆகியவை தொடர்ந்து செலுத்தி வருகின்றனர் கடந்த 100 வருடங்களுக்கு முன்பு இருந்து இந்த இடங்கள் பரிமாற்றம், பரிவர்த்தனை, விற்பனை நடந்ததற்கான பத்திரங்கள் தங்கள் கைவசம் உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதனிடையே திருத்தொண்டர் திருச்சபை நிறுவனத்தின் தலைவர் ராதாகிருஷ்ணன் சென்னை உயர்நீதிமன்ற கிளை மதுரையில் தொடுத்த வழக்கில், கோவில் நிலங்கள் கோவிலுக்கு தான் சொந்தம் என்ற தீர்ப்பை பெற்றதின் அடிப்படையில், அண்மை காலமாக நிலங்களை மீட்டு வருகின்றனர்.
ஆனால், முறையாக அரசுக்கு வரி செலுத்தி, பணம் கொடுத்து வாங்கிய நிலத்தை, தற்போது கோவில் நிலம் என்று கூறினால் அதை எவ்வாறு ஏற்க முடியும் என கேள்வி எழுப்புகின்றனர். இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்களி்ல் ஒருவரான காமராஜ் செய்தியாளர் தெரிவிக்கும்போது, வெண்ணமலை மற்றும் ஆத்தூர் பகுதியில் உள்ளவை கோவில் நிலங்கள் எனக்கூறி 1979 ஆம் ஆண்டு தீர்ப்பு பெற்று விட்டதாகவும், அதை முறையாக அமல்படுத்தாமல் விட்டுவிட்டதால், அதை அறியாத நாங்கள் இடம் வாங்கி வீடு கட்டி விட்டோம்.
அப்போது,நாங்கள் செலுத்திய கட்டணங்களையும், நிலங்கள் சார்ந்த பத்திரப்பதிவுகளையும் ஏற்றுக் கொண்ட அரசு நிர்வாகம் இப்போது மறுப்பது ஏன்? தற்போது அறநிலையத்துறை அதிகாரிகள் எங்கள் வீட்டை காலி செய்ய வேண்டும். அல்லது முறையாக வரி செலுத்த வேண்டும். இல்லையென்றால் மின் இணைப்பையும், குடிநீர் இணைப்பையும் துண்டிப்போம் என மிரட்டுகிறார்கள்.
எங்கள் பகுதியில் 2000 குடும்பங்களுக்கு மேல் வசித்து வருகிறோம்.இதில் ஐந்தாயிரம் வாக்காளர்கள் உள்ளார்கள்.எனவே, எங்கள் நில உரிமையை மீட்பதற்காக எங்களுக்கு நியாயமான ஆதரவு கொடுக்கும் எந்த அரசியல் அமைப்பாக இருந்தாலும் அதை ஏற்றுக் கொள்வோம்.ஏற்றுக்கொள்ளாத பட்சத்தில் பல்வேறு போராட்டங்கள் நடத்துவோம்.
தற்போது இதை அரசின் கவனத்திற்கு கொண்டு வருவதற்காகவும், அறநிலையத்துறைக்கு எங்களுடைய எதிர்ப்பை பதிவு செய்வதற்காகவும் இன்று வீடுகள் தோறும் கருப்புக்கொடி கட்டி வரும் நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக தெரிவித்தார்.