கரூரில் நிலத்தை ஒட்டுமொத்தமாக அடியாட்களுடன் அபகரிக்க முயற்சி
போலீசார் விசாரணை
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பெரிய குளத்துப்பாளையத்தை சேர்ந்தவர் அம்மையப்பன். இவரது வாரிசுகள் 18 குடும்பத்தினருக்கு தன்னுடைய 7.5 ஏக்கர் நிலத்தை பிரித்து கொடுத்துள்ளார். அதில் சரவணன் என்பவருடைய ஒரு குடும்பத்தினர் மட்டும் முழு நிலத்தையும் தனக்கே சொந்தம் எனக் கூறியதாக சொல்லப்படுகிறது.
இதனால் 17 குடும்பத்தை சேர்ந்த மற்ற பங்குதாரர்கள் மற்றும் அவரது வாரிசுகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அந்த வழக்கு கடந்த 35 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் அந்த ஒரு குறிப்பிட்ட பங்குதாரர் மற்றும் அவரது வாரிசுகளின் தூண்டுதலின் பேரில், பங்கு பிரித்த 7.5 ஏக்கர் நிலத்திற்கும் கம்பி வேலி போட்டு, 5 பொக்ளைன் இயந்திரம் மூலம் சுத்தம் செய்யும் பணியினை மேற்கொண்டுள்ளனர்.
இது தொடர்பாக வெங்கமேடு காவல் நிலையத்தில் வாரிசுதாரர்கள் புகார் அளித்தும் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால், சரவணன் மற்றும் அவர்களது குடும்பத்தினர் அரசாங்க பணியில் இருப்பதால் காவல்துறையினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறுகின்றனர்.
இந்நிலையில் அந்த இடத்தின் வாரிசுதாரர்கள் இன்று அந்த இடத்தை முற்றுகையிட்டனர். இந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வெங்கமேடு காவல் நிலைய காவல்துறையினர் பொக்லைன் இயந்திரங்களை வெளியேற்றினர். வழக்கு நிலுவையில் இருப்பதால், நிலத்திற்கு உள்ளே யாரும் பிரவேசிக்க கூடாது என்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களையும் வெளியேற்றினர்.
நிலப் பிரச்சனை சம்பந்தமாக தேசிய நெடுஞ்சாலை அருகே நூற்றுக்கணக்கான வாரிசுதாரர்கள் ஒரே நேரத்தில் குவிந்ததால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது. மேலும், இந்த பிரச்சனை சம்பந்தமாக கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.